திருப்பீடத்தின் நிர்வாகம், முதலீடுகள் வழி வருமானம் அதிகரிப்பு
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
APSA என்னும் திருப்பீடத்தின் சொத்துக்களை நிர்வகிக்கும் அமைப்பு, 2023ஆம் ஆண்டில் 4 கோடியே 59 இலட்சம் யூரோக்களை இலாபமாக ஈட்டியுள்ளதாக அறிவித்துள்ளது.
2023ஆம் ஆண்டிற்கான வரவு செலவு விவரங்களை வெளியிட்டுள்ள APSA என்ற அமைப்பு, கடந்த ஆண்டு முதலீடுகள் வழி கிட்டிய இலாபத்தில் 3 கோடியே 79 இலட்சம் யூரோக்களை திருத்தந்தையின் மறைப்பணிகளுக்கென வழங்கியுள்ளதாகவும், அதேவேளை, திருப்பீடத்தின் சொத்துக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படுத்தாமலும், எந்த சொத்துக்களையும் விற்காமலும், சொத்துக்களின் மதிப்பு 79 இலட்சம் யூரோக்கள் அதிகரித்துள்ளதாக அதில் தெரிவிக்கிறது.
திருப்பீடத்தின் சொத்துக்களை நன்முறையில் நிர்வகித்தல், வருமானத்தை சிறந்தமுறையில் கையாளுதல் போன்ற வழிமுறைகளை துல்லியமாக பின்பற்றியுள்ள இந்த வரவு செலவு கணக்கு, 2022ஆம் ஆண்டை விட 56 இலட்சத்து 30 ஆயிரம் யூரோக்களை 2023ஆம் ஆண்டில் அதிகம் ஈட்டியுள்ளதாக தெரிவிக்கிறது. அது மட்டுமல்ல, திருப்பீடச் சொத்துக்களின் மதிப்பும் 79 இலட்சம் யூரோக்கள் அதிகரித்துள்ளது.
திருப்பீடத்தின் அசையும் சொத்துக்களை, திருஅவையின் சமூகக்கோட்பாடுகளுக்கு இயைந்தவகையில் குருட்டு ஆதாய வேட்டையிலோ, இழப்பின் ஆபத்து நிறைந்த முதலீடுகளிலோ ஈடுபடுத்தாமல், பன்னாட்டுப் பங்குப் பத்திரங்கள், நிரந்தர வருவாய் தரும் பங்கு பத்திரங்கள், நிதி அமைப்புக்கள் வழியான முதலீடுகள் வழி வருமானம் அதிகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருஅவையின் முதலீடுகளைப் பொறுத்தவரையில் வருங்காலத்தில் திருஅவை ஒழுக்க ரீதி மதிப்பீடுகளுக்கு இயைந்தவகையில் மேலும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் APSA அமைப்பு அறிவித்துள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்