பிலிப்பீன்ஸில் வத்திக்கான் வெளியுறவுச் செயலரின் 5 நாள் பயணம்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
நாடுகளுக்கான வத்திக்கான் வெளியுறவுத் துறையின் செயலர், பேராயர் Paul Richard Gallagher அவர்கள் பிலிப்பீன்ஸ் நாட்டில் 5 நாள் பயணத்தை மேற்கொண்டுவருகிறார்.
பிலிப்பீன்ஸ் நாட்டில் சிறப்பிக்கப்படும் திருத்தந்தையர் தினம் என்ற கொண்டாட்டத்தில் கலந்துகொள்வதோடு, அரசு உயர் அதிகாரிகளைச் சந்திப்பது, பிலிப்பீன்ஸ் ஆயர்களின் ஆண்டு நிறையமர்வுக் கூட்டத்தில் பங்கேற்பது போன்றவைகளிலும் கலந்துகொள்ளும் பேராயர் கல்லகர், இம்மாதம் 6ஆம் தேதி வத்திக்கான் திரும்புவார்.
ஜூலை முதல் தேதி துவங்கிய திருப்பீட வெளியுறவுச் செயலரின் பிலிப்பீன்ஸ் நாட்டுப்பயணம், புனிதர்கள் பேதுரு மற்றும் பவுலின் திருவிழாவை சிறப்பிக்கும் விதமாக மணிலாவின் திருப்பீடத் தூதரகத்தில் இடம்பெற்ற திருத்தந்தையர் தினக்கொண்டாட்டத்தில் கலந்துகொண்டதோடு தொடர்ந்தது.
ஜூலை மாதம் 2ஆம் தேதி, செவ்வாய்க்கிழமையன்று பிலிப்பீன்ஸ் அரசுத்தலைவர் பெர்டினண்ட் மார்க்கோஸ் ஜூனியர், வெளியுறவுத்துறைச் செயலர் என்ரிக் மனாலோ ஆகியோரைச் சந்தித்துப் பேச்சுவார்த்தைகள் நடத்தினார் வத்திக்கான் வெளியுறவுத்துறைச் செயலர், பேராயர் கல்லகர்.
ஜூலை 3ஆம் தேதி வட மிந்தனாவோ பகுதியிலுள்ள மலாய்பலாய் என்ற இடத்தில் நடக்கும் பிலிப்பீன்ஸ் ஆயர்கள் அவையின் ஆண்டு நிறையமர்வுக் கூட்டத்தில் கலந்து கொள்ளும் பேராயர், அதற்கு அடுத்த நாள், அதாவது, ஜூலை 4ஆம் தேதி ஆயர்களுடன் இணைந்து மலாய்பலாயின் திருக்காட்சி துறவு மடத்தில் திருப்பலி நிறைவேற்றுவார்.
தன் பயணத்தின் இறுதி நாளான ஜூலை 5ஆம் தேதி, வெள்ளிக்கிழமையன்று, பிலிப்பீன்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சகத்துடன் இணைந்த மணிலாவின் வெளியுறவுச் சேவை நிறுவனத்தின் கலந்துரையாடலிலும் கலந்துகொள்வார் பேராயர் கல்லகர்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்