தேடுதல்

பெர்டிகீவ் மரியன்னை திருத்தலத்தில் திருப்பலியின்போது கர்தினால் பரோலின் பெர்டிகீவ் மரியன்னை திருத்தலத்தில் திருப்பலியின்போது கர்தினால் பரோலின் 

கடவுளால் எல்லாம் முடியும் என்ற நம்பிக்கை வேண்டும்

துயரமானது நமது இறைநம்பிக்கையை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் போதும், நமது கைகள் தளர்ந்து தீமையின் கை மேலோங்கி இருக்கும் போதும், நாம் நினைவில் கொள்ளவேண்டியது "மனிதரால் இயலாதது கடவுளால் இயலும்" என்ற இறைவார்த்தையே.

மெரினா ராஜ் – வத்திக்கான்

உக்ரைனில் உள்ள தலத்திருஅவையானது இறைவாக்கினர் எலியாவைப்போல இறைவாக்குப் பணி செய்ய அழைக்கப்படுகின்றது என்றும், கடவுளால் எல்லாம் முடியும் என்ற நம்பிக்கையுடன் தொடர்ந்து அமைதிக்காக செபிக்க வேண்டும் என்றும் கூறினார்  கர்தினால் பியத்ரோ பரோலின்.

ஜூலை 21 ஞாயிற்றுக்கிழமை உக்ரைனின் பெர்டிகீவ் தூய மரியன்னை தேசிய திருத்தலத்தில் சிறப்பு திருப்பலி நிறைவேற்றி மறையுரையாற்றியபோது இவ்வாறு கூறினார் திருப்பீடச்செயலர் கர்தினால் பியத்ரோ பரோலின்.

இடைவிடாத நமது செபத்தினால் கடவுளது வழியை விட்டு விலகி இருப்பவர்கள், சுயவிருப்பத்திற்கு அடிமைகளாக மாறியவர்கள், வன்முறை மற்றும் மரணத்தை விதைப்பவர்கள், மனித மாண்பை சீர்குலைப்பவர்கள் ஆகியோரின் இதயத்தை கடவுள் நமது தொடர் செபத்தின் வழியாக மாற்றுவார் என்றும் கூறினார் கர்தினால் பரோலின்.

இறைவாக்கினர் எலியா நூலிலிருந்து வாசிக்கப்பட்ட முதல் வாசகத்தில் கர்மேல் மலையில் ஆண்டவர் பாகால் தெய்வத்தை வழிபடுபவர்கள் முன் தன்னை வெளிப்படுத்திய நிகழ்வை சுட்டிக்காட்டி மக்களுக்கு செய்தி வழங்கிய கர்தினால் பரோலின் அவர்கள், வானத்திலிருந்து வந்த நெருப்பானது மனித இதயங்களின் மாற்றத்தையும், உள்ளார்ந்த இதயத்தை மாற்றும் அருளின் நெருப்பையும் அடையாளப்படுத்துகின்றது என்று கூறினார்.

பேராசை, வீண்பெருமை, இன்பம் ஆகிய மூன்று உணர்வுகளால் நம் அறிவாற்றலானது குருடாகிப்போகிறது என்ற பண்டையகால ஆசிரியரின் கருத்தை எடுத்துரைத்த கர்தினால் பரோலின் அவர்கள், இத்தகையக் கொடிய நோய்களிலிருந்து நம்மைக் குணப்படுத்தி, கல்லான இதயத்திற்குப் பதிலாக தசையுள்ள இதயத்தை நாம் பெற விண்ணக மருத்துவராகிய இறைவனிடம் மன்றாட வேண்டும் என்றும் கூறினார்.   

மனிதரால் ஆகாதது கடவுளால் ஆகும், கடவுளால் முடியாதது ஒன்றுமில்லை என்று கபிரியேல் வானதூதர் வாயிலாக கூறப்பட்ட இறைவார்த்தையை சுட்டிக்காட்டிய கர்தினால் பரோலின் அவர்கள், போரின் தீவிரங்கள் அதிகரித்து வரும் இச்சூழலில், கடவுள் மீது நாம் கொண்டுள்ள நம்பிக்கையை ஒருபோதும் இழந்துவிடக் கூடாது என்றும் கூறினார்.   

போரின் பயங்கரங்கள், பல உயிரிழப்புகள், பொருள்சேதங்கள், பாரம்பரிய இடங்களின் அழிவுகள் போன்றவற்றினால் ஏற்படும் துயரமானது நமது இறைநம்பிக்கையை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் போதும், ​​நமது கைகள் தளர்ந்து தீமையின் கை மேலோங்கி இருக்கும் போதும், நாம் நினைவில் கொள்ளவேண்டியது மனிதரால் இயலாதது கடவுளால் இயலும் என்ற இறைவார்த்தையே எனக் கூறினார் கர்தினால் பரோலின்.

தூய கன்னி மரியா தனது திருமகன் இயேசுவோடு உடன் பயணித்து, அவரது துன்பத்தில் பங்கேற்று, எவ்வாறு உயிர்ப்பின் மகிழ்வைப் பெற்றுக்கொண்டாரோ அதுபோல நாமும் அவரது உயிர்ப்பின் மகிழ்வை அடைவோம் என்ற உறுதியுடன் வாழ வேண்டும் என்றும் அமைதிக்காக அன்னை மரியின் பரிந்துரையைத் தொடர்ந்து நாடவேண்டும் என்றும் கூறினார் கர்தினால் பரோலின்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 July 2024, 13:27