தேடுதல்

திருப்பீடச்செயலர் கர்தினால் பியத்ரோ பரோலின் திருப்பீடச்செயலர் கர்தினால் பியத்ரோ பரோலின்  

கடினமான இதயங்களை நம்பிக்கையின் வழியாகத் தொடலாம்

நம்பிக்கையை ஒருபோதும் கைவிடக்கூடாது, நல்லெண்ணம் கொண்ட பலரின் உதவியுடன் நியாயமான மற்றும் நிலையான அமைதியை அடைவதற்கான ஒரு வழியைக் காணலாம்.

மெரினா ராஜ் – வத்திக்கான்

கிறிஸ்தவர்களாகிய நாம் நம்பிக்கையை ஒருபோதும் இழக்கக்கூடாது, கடவுளது அருளால் கிடைக்கும் இந்த நம்பிக்கையின் வழியாகக் கடினமான இதயங்களைக் கூட நம்மால் தொட முடியும் என்றும், மிகவும் கடினமான இத்துன்ப நேரங்களில் உக்ரைன் மக்களுடன் உடன் இருந்து அவர்களின் துன்பத்தை பகிர்ந்து நம்பிக்கையைத்தர வேண்டும் என்றும் கூறினார் கர்தினால் பியத்ரோ பரோலின்.

5 நாள் பயணமாக உக்ரைன் சென்றிருக்கும் திருப்பீடச்செயலர் கர்தினால் பியத்ரோ பரோலின் அவர்கள், போரினால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றான ஒடேசாவில் இறந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்காகவும் செபித்து, அங்குள்ள மரியன்னை பேராலயத்தில் உரோமன் கத்தோலிக்க சமூகத்தாரைச் சந்தித்தபோது இவ்வாறு கூறினார்.

உக்ரைன் மக்களுக்காகத் தொடர்ந்து செபிக்க பரிந்துரைத்து வரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் நெருக்கத்தை வெளிப்படுத்தும் விதமாகவும், அவரது ஆசீரை எடுத்துரைத்து துன்புறும் அம்மக்களுக்கு ஊக்கமூட்டும் வார்த்தைகளைக் கூறினார் கர்தினால் பரோலின்.   

நம்பிக்கையை ஒருபோதும் கைவிடக்கூடாது என்று வலியுறுத்திய கர்தினால் பரோலின் அவர்கள், நல்லெண்ணம் கொண்ட பலரின் உதவியுடன், நியாயமான மற்றும் நிலையான அமைதியை அடைவதற்கான ஒரு வழியைக் காணலாம் என்றும் எடுத்துரைத்தார்.

இதுவே நமது செபம், விருப்பம், நமது ஆற்றல், பணி என்று எடுத்துரைத்த கர்தினால் பரோலின் அவர்கள், பெர்டிகீவ் மரியன்னை திருத்தலத்தில் நடைபெறும் கொண்டாட்டங்களில் பங்கேற்க வந்திருக்கும் தனது வருகையும், இதற்கு முன் உக்ரைன் வந்திருந்த கர்தினால் ஷூப்பி அவர்களின் வருகையும், அமைதியைக் கொண்டுவருவதற்கான சிறு முயற்சி, பங்களிப்பு மற்றும் தொடர்பயணம் என்றும் கூறினார்.  

மிகவும் கடினமான இத்துன்ப நேரங்களில் உக்ரைன் மக்களுடன் உடன் இருந்து அவர்களின் துன்பத்தை பகிர்ந்து நம்பிக்கையை வழங்குவதாக எடுத்துரைத்த கர்தினால் பரோலின் அவர்கள், அமைதிக்காகத் தொடர்ந்து செபிப்போம் என்றும் கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 July 2024, 13:20