தேடுதல்

2023ல் இடம்பெற்ற ஆயர் மாமன்ற கூட்டம் 2023ல் இடம்பெற்ற ஆயர் மாமன்ற கூட்டம்  (ANSA)

ஆயர் மாமன்ற கூட்டத்தொடருக்கென வழிமுறை வழிகாட்டு ஏடு

வெளிப்படைத்தன்மை, பொறுப்பேற்பு மற்றும் திருஅவையில் பெண்களின் பங்களிப்பு உட்பட பல்வேறு விடயங்கள் குறித்து எடுத்துரைக்கும் ஆயர் மாமன்றத்தின் வழிமுறை வழிகாட்டு ஏடு

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

இவ்வாண்டு அக்டோபர் மாதம் இடம்பெற உள்ள ஆயர் மாமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடருக்கென இச்செவ்வாய்க்கிழமையன்று வெளியிடப்பட்ட வழிமுறை வழிகாட்டு ஏடு, வெளிப்படைத்தன்மை, பொறுப்பேற்பு மற்றும் திருஅவையில் பெண்களின் பங்களிப்பு உட்பட பல்வேறு விடயங்கள் குறித்து எடுத்துரைத்துள்ளது.

அக்டோபர் மாதம் 2ஆம் தேதி முதல் 27வரை இடம்பெற உள்ள ஆயர் மாமன்ற கூட்டத்தொடருக்கென வெளியிடப்பட்டுள்ள இந்த வழிமுறை வழிகாட்டு ஏட்டின் இதயமாக, ஒன்றிணைந்து நடைபோடும் மறைபோதக திருஅவையாக எவ்வாறு இருப்பது? என்ற கேள்வி இருப்பதாக திருப்பீட செய்தித்துறை உரைக்கிறது.

2023ஆம் ஆண்டு இடம்பெற்ற ஆயர் மாமன்ற கூட்டத்தின் தொடர்ச்சியாக இரண்டாவது கூட்டத்திற்கென வெளியிடப்பட்டுள்ள இவ்வேடு, ஏற்கனவே தயாரித்த பதில்களை கொண்டிருக்கவில்லை, மாறாக வழிகாட்டுதல்களையும் பரிந்துரைகளையும் கொண்டுள்ளது என்கிறது திருப்பீட செய்தித்துறை.  

முன்னுரை, அடித்தளங்கள் மற்றும் மூன்று மத்தியப் பகுதிகள் என ஐந்து பகுதிகளைக் கொண்டுள்ள இந்த ஏடு, இதுவரை நாம் ஒன்றிணைந்து நடத்தலில் எட்டியுள்ள மைல்கல், ஒன்றிணைந்து நடைபோடுதல் குறித்து புரிந்துகொண்டது, திருஅவையில் பெண்களை உயர்த்தி மதிப்பிடல், திருஅவையில் பெண்களின் பங்களிப்பும் பொறுப்பேற்பும், பெண்களை திருத்தொண்டாராக்குதல் குறித்த இறையியல் சிந்தனைகளைத் தொடர்தல் போன்றவைகள் குறித்த வழிகாட்டுதல்களையும் கொண்டுள்ளது.

இறுதி மூன்று பகுதிகளில் முதல்பகுதியில், இறைவனுடனும், நம் சகோதரர் சகோதரிகளுடனும் ஏனைய கிறிஸ்தவ சபைகளுடனும் உறவு கொண்டிருத்தல் என்பது பற்றியும், இரண்டாம் பகுதியில், உருவாக்க பயிற்சியளிக்கும் பாதைகள் மற்றும் சமூக பகுத்தறிதல் என்பது குறித்தும், இறுதிப் பகுதியில், கிறிஸ்தவ சபைகளுக்கிடையேயும், பிறமதங்களுக்கிடையேயும் பேச்சுவார்த்தைகளுக்கான இடங்கள் என்பது குறித்தும் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 July 2024, 14:59