அணுசக்தி வளர்ச்சி குறித்து திருப்பீடம் ஆழ்ந்த கவலை!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
ஐக்கிய நாடுகள் அவையின் ஜெனிவா தலைமையகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அணு ஆயுதப் பரவல் தடை குறித்து உரையாற்றிய பேராயர் Ettore Balestrero அவர்கள், அணு ஆயுதங்களால் இருத்தலுக்கான அச்சுறுத்தல் பற்றியும் எச்சரித்தார்.
அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தின் 2026-ஆம் ஆண்டின் மறுஆய்வு மாநாட்டின் இரண்டாவது ஆயத்தக் குழு- அதிகாரப்பூர்வமாக தலைப்பிடப்பட்ட விவாதத்திற்கு கூடியிருந்தவர்களிடம் இவ்வாறு தெரிவித்த ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை மற்றும் பிற அனைத்துலக அமைப்புகளுக்கான திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் பேராயர் Ettore Balestrero அவர்கள், அணுசக்தி வளர்ச்சி குறித்து திருப்பீடம் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாகவும் கூறினார்.
அணு ஆயுதங்கள் என்பது, ஓர் இருத்தலுக்கான அச்சுறுத்தல் என்றும், இது தற்போதைய பதட்டமான போர்த்திறன் சார்ந்த மற்றும் நிகழ்ந்து வரும் நவீனமயமாக்கல் மற்றும் அணு ஆயுதங்களின் விரிவாக்கத்தால் மோசமடைந்துள்ளது என்று தனது உரையில் குறிப்பிட்டார் பேராயர் Balestrero.
அணு ஆயுதங்கள் தொடர்பான இராணுவ செலவினங்களின் தொடர்ச்சியான வளர்ச்சி மற்றும் அதன் வளர்ச்சி அதிகரிப்பு மற்றும் அவற்றின் சாத்தியமான பயன்பாடு பற்றிய அச்சுறுத்தல்கள் இரண்டிலும் திருப்பீடம் அக்கறை கொண்டுள்ளது என்று கூறிய பேராயர் Balestrero அவர்கள், இத்தகைய நடவடிக்கைகள், ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கும் அவமானம் என்றும் சுட்டிக்காட்டினார்.
அணு ஆயுத பரவல் மற்றும் தடை, நேர்மையான உரையாடல், அணு ஆயுதங்களுக்கு செலவிடப்படும் பணத்தை மனிதாபிமான திட்டங்களுக்காகச் செலவிடல் ஆகிய மூன்று பரிந்துரைகளையும் திருப்பீடம் முன்வைக்க விரும்புவதாகக் கூறி தனது உரையை நிறைவு செய்தார் பேராயர் Balestrero.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்