தேடுதல்

திருப்பலியின்போது பேராயர் பால் ரிச்சர்டு காலகர். திருப்பலியின்போது பேராயர் பால் ரிச்சர்டு காலகர்.  

நம்பிக்கையின் முன்னோடிகளான புனிதர்கள் எர்மகோரா, ஃபொர்த்துனாத்தோ

"நல்ல ஆயனின் பண்புகளைக் கொண்டவர்களாக ஆக்குயிலா மக்களின் இதயங்களை வென்றனர் புனிதர்களான எர்மகோரா, ஃபொர்த்துனாத்தோ.°

மெரினா ராஜ் – வத்திக்கான்

ஆக்குயிலா தலத்திருஅவையில் நற்செய்தியானது ஒரு விதையைப் போல வேரூன்றி, கிளைபரப்பி, பழங்கள் தரும் மரமாக மாற நம்பிக்கையின் முன்னோடிகளாக புனிதர்கள் எர்மகோரா, ஃபொர்த்துனாத்தோ ஆகியோர் இருந்தனர் என்றும், தெய்வீக அமைதியைக் கொண்ட இவர்களின் நற்செய்திப்பணியானது மக்களுக்கு மீட்பின் ஒளியைக் கொண்டு வந்தது என்றும் கூறினார் பேராயர் பால் ரிச்சர்டு காலகர்.

ஜூலை 12 வெள்ளிக்கிழமை வடக்கு இத்தாலியின் ஆக்குயிலா நகரில் புனிதர்களான எர்மகோரா, ஃபொர்த்துனாத்தோ அவர்களை நினைவுகூர்ந்து நடைபெற்ற திருப்பலியில் பங்கேற்று மறையுரையாற்றியபோது இவ்வாறு கூறினார் திருப்பீட வெளியுறவுத்துறைச் செயலர் பேராயர் பால் ரிச்சர்டு காலகர்.

புனிதர்களான ஆயர் எர்மகோரஸ், திருத்தொண்டர் ஃபொர்த்துனாதுஸ் ஆகியோரின் வாழ்க்கையானது கவனிப்பு மற்றும் போராட்டம் எனும் இரண்டு கிறிஸ்தவ அனுபவங்களை எடுத்துரைப்பதாகக் கூறினார் பேராயர் பால் ரிச்சர்டு காலகர்.

"நல்ல ஆயனின் பண்புகளைக் கொண்டவர்களாக ஆக்குயிலா மக்களின் இதயங்களை வென்றனர் என்றும், காணாமல் போனதைத் தேடுவேன்; அலைந்து திரிவதைத் திரும்பக்கொண்டுவருவேன்; காயப்பட்டதற்குக் கட்டுப்போடுவேன்; நலிந்தவற்றைத் திடப்படுத்துவேன். என்ற எசேக்கியேல் இறைவாக்கினரின் வார்த்தைக்கிணங்க ஒவ்வொரு மக்களையும் நன்கு அறிந்து அவர்களில் கடவுளைக் கண்டு வாழ்ந்தவர்கள் புனிதர்கள் என்றும் கூறினார் பேராயர் காலகர்.

 நாம் வாழ்கின்ற வாழ்க்கை மிக துயரமாக கசப்பாக இருந்தாலும், பிறர் நம்மை ஏமாற்றினாலும், பாவம் என்று தோன்றினாலும் கடவுள் பார்வையில் நாம் அனைவரும் விலைமதிப்பற்றவர்கள் என்பதை உணர்ந்து வாழவேண்டும் என்றும், மென்மை, அக்கறை கொண்ட கடவுள் மீது நமது இதயத்தின் பார்வையைத் திருப்புவது மிக அவசியம் என்றும் வலியுறுத்தினார் பேராயர் காலகர்.

குடும்பம் மற்றும் தொழில்சார் கடமைகளை நாம் அன்புடன் நிறைவேற்றுதல், நம்பிக்கை மற்றும் கிறிஸ்தவக் கோட்பாட்டின் உண்மையை உலகிற்கு சாட்சியாகக் காட்டும் துணிவு, மனித மாண்பு, அமைதி மற்றும் நீதியைப் பாதுகாக்க உழைத்தல் போன்றவற்றிந் போதெல்லாம் உள்ளார்ந்த ஒரு போராட்டம் நமக்குள் நடைபெறுகின்றது என்றும் அந்நிலையில் நாம் கிறிஸ்துவின் சீடர்களாகத் தொடர்ந்து உழைக்க வேண்டும் என்றும் கூறினார்.

ஒரு சீடன் தன் குருவுக்கு உண்மையாக இருக்க முற்படும்போது, ​​ இறைவன் அவர் அருகிலேயே இருக்கிறார், அவரை விட்டு விலகவில்லை, அவரில் அவர் தனது பலத்தைக் காண்கிறார் என்பதை அவர் அறிவார் என்று கூறிய பேராயர் காலகர் அவர்கள்,  நாங்கள் எல்லாச் சூழ்நிலைகளிலும் இன்னலுற்றாலும் மனம் உடைந்து போவதில்லை; குழப்பமுற்றாலும் நம்பிக்கை இழப்பதில்லை; துன்புறுத்தப்பட்டாலும் கைவிடப்படுவதில்லை; வீழ்த்தப்பட்டாலும் அழிந்துபோவதில்லை. இயேசுவின் வாழ்வே எங்கள் உடலில் வெளிப்படுமாறு நாங்கள் எங்கு சென்றாலும் அவருடைய சாவுக்குரிய துன்பங்களை எங்கள் உடலில் சுமந்து செல்கிறோம். என்ற திருத்த்தூதர் பவுலின் வார்த்தைகளை மேற்கோள்காட்டினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 July 2024, 13:32