தேடுதல்

உக்ரைன் அதிபர் மற்றும் திருப்பீடச் செயலர் கர்தினால் பரோலின் சந்திப்பு உக்ரைன் அதிபர் மற்றும் திருப்பீடச் செயலர் கர்தினால் பரோலின் சந்திப்பு  (AFP or licensors)

உக்ரைன் அதிபர் மற்றும் திருப்பீடச் செயலர் கர்தினால் பரோலின் சந்திப்பு!

திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்களை உக்ரைனின் அரசுத் தலைவர் வோலோதிமிர் ஜெலென்ஸ்கி அவர்கள் அந்நாட்டின் கீவ் நகரில் வரவேற்றார். அவருக்குத் திருத்தந்தையின் ஒன்றிப்பு மற்றும் நியாயமான மற்றும் நீடித்த அமைதியை காண உதவும் திருப்பீடத்தின் அர்ப்பணிப்பை உறுதிப்படுத்தினார் கர்தினால் பரோலின்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

ஜூலை 23, இச்செவ்வாயன்று, உக்ரைனின் கீவ் நகரில் அந்நாட்டு அரசுத் தலைவர்  வோலோதிமிர் ஜெலென்ஸ்கி அவர்களைச் சந்தித்த திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், திருப்பீடத்தின் அமைதிக்கான உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.

இருவருக்கிடையேயான இந்தச் சந்திப்பின்போது, ஜெலென்ஸ்கி அவர்கள் கர்தினால் பரோலின் அவர்களுக்கு உக்ரைன் நாட்டின் உயரிய விருதை வழங்கி கெளரவித்தார். திருப்பீடம் மற்றும் உக்ரைனுக்கு இடையேயான உறவில் வளர்ச்சியைக் காணச் செய்தமைக்காகவும், குறிப்பாக, போர்க்காலங்களில் தனது பேராதரவை வழங்கியமைக்காகவும் இந்த விருது கர்தினால் பரோலின் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இவ்விருவரின் சந்திப்பைத் தொடர்ந்து, திருத்தந்தையின் ஒன்றிப்பு மற்றும் நியாயமான மற்றும் நீடித்த அமைதியைக் காண உதவும் திருப்பீடத்தின் அர்ப்பணிப்பை திருப்பீடச் செயலர் கர்தினால் பரோலின் அவர்கள் உறுதிப்படுத்தியது குறித்து, அதன் மாநிலச் செயலகம் தனது எக்ஸ்தள பக்கத்தில் அறிவித்துள்ளது.

உக்ரைன்மீதான இரஷ்யாவின் ஆக்கிரமிப்பு போர் தொடங்கியதிலிருந்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்நாட்டின்மீது தொடர்ந்து தனது அக்கறையை வெளிப்படுத்தும் விதமாக இறைவேண்டல் செய்வதுடன், போரால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைன் மக்களுக்கு பல்வேறு வழிகளில் உதவி வருகின்றார் என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமன்றி, போரினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைன் நாட்டிற்குச் சென்று உக்ரைன் அதிபரைச் சந்திக்குமாறு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பொலோங்கியோவின் கர்தினால் மற்றும் இத்தாலிய ஆயர் பேரவையின் தலைவருமான பேராயர் மத்தேயோ ஜூப்பி அவர்களைக் கேட்டுக்கொண்டார் என்பதும் இங்கே நினைவுகூரத்தக்கது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 July 2024, 13:10