தேடுதல்

கர்தினால் பியெத்ரோ பரோலின். கர்தினால் பியெத்ரோ பரோலின். 

போர் என்ற கருத்து மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும்!

உக்ரைன், இஸ்ரயேல், பாலஸ்தீனம் லெபனோன் நாடுகளில் அமைதி நிலவவேண்டியதன் அவசியம் குறித்தும், குறிப்பாக, பிணையக்கைதிகள் விடுவிக்கப்படவேண்டியதன் தேவைக் குறித்தும், மக்களாட்சி மற்றும் மனித உரிமைகள் கட்டிக்காக்கப்படவேண்டியதன் அவசியம் குறித்தும் எடுத்துரைத்தார். கர்தினால் பரோலின்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

சில வேளைகளில் தூதரக முயற்சிகள் சிறிய முடிவுகளைத் தருவதாகத் தோன்றினாலும், நாம் ஒருபோதும் சோர்வடையவோ, அல்லது விட்டுவிடத் தோன்றும் சோதனைக்கு அடிபணியவோ கூடாது என்றும், நமது கடமையாக அமைந்துள்ள அமைதி என்பது நமது அன்றாட வாழ்வில், நமது நகரங்களில், நாடுகளில், உலகில் தொடங்குகிறது என்றும் கூறினார் திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின்.

ஜூலை 2, இச்செவ்வாயன்று, திருப்பீடத்திற்கான இத்தாலிய தூதரகத்தில் தூதுவர் இலக்கிய விருதுவழங்கும் விழா ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோது இவ்வாறு தெரிவித்த கர்தினால் பரோலின் அவர்கள், அமைதியைக் கட்டியெழுப்பவேண்டியதன் அவசியம் குறித்து அதிகம் வலியுறுத்தினார்.

இத்தாலிய RAI பத்திரிகையாளர் Piero Damosso எழுதியுள்ள, “Can the Church stop the war? An investigation sixty years after Pacem in terris” அதாவது, "திருஅவை போரை நிறுத்த முடியுமா? 'அவனியில் அமைதி' திருமடலின் அறுபது ஆண்டுகளுக்குப் பிறகான ஆய்வு" என்ற நூல் இந்த விருதைப்பெற்றுள்ள வேளை, அதுகுறித்து குறிப்பிட்ட கர்தினால் பரோலின் அவர்கள், போர் என்பது மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என்பதை உறுதிப்படுத்துவதற்கு ஒரு சான்றாக இது அமைந்துள்ளது என்பதையும் சுட்டிக்காட்டினார்.

1963-ஆம் ஆண்டு ஏப்ரல் 13-ஆம் தேதி, புனித சனிக்கிழமையன்று, திருத்தந்தை 23-ஆம் யோவான் பவுல் அவர்களின், கடவுளுடன், அனைத்து மக்களுடனும், குடும்பங்களில் அமைதியின் அவசியத்தை வலியுறுத்திய வரலாற்று வானொலி செய்தி ஒன்றை நினைவுகூர்ந்த கர்தினால் பரோலின் அவர்கள், உலகளாவிய அமைதி என்பது அனைவருக்கும் நலம்பயக்கக் கூடியது என்று மீண்டும் வலியுறுத்தினார்.

ஆகவே, உலகின் பல்வேறு பகுதிகளில் தற்போது நிலவும் மோதல்களை எதிர்கொள்ளும் வகையில், அமைதிக்கான முயற்சிகள் பலனைத் தரும் என்ற உறுதியை ஏற்படுத்தும் வகையில் தூதரக முயற்சிகள் அமைய வேண்டியதன் அவசியத்தையும் குறிப்பிட்ட கர்தினால் பரோலின் அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வலியுறுத்துவது போல், உண்மையிலேயே அமைதியின் கைவினைஞர்களாக இருப்பதற்கு ஒரு கூட்டு முயற்சி மற்றும் ஒத்துழைப்புக்கு அழைப்புவிடுத்தார்.

இதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய கர்தினால் பரோலின் அவர்கள், உக்ரைன், இஸ்ரயேல், பாலஸ்தீனம், லெபனோன் ஆகிய நாடுகளில் அமைதி நிலவவேண்டியதன் அவசியம் குறித்தும், குறிப்பாக, பிணையக்கைதிகள் விடுவிக்கப்படவேண்டியதன் தேவைக் குறித்தும், மக்களாட்சி மற்றும் மனித உரிமைகள் கட்டிக்காக்கப்படவேண்டியதன் அவசியம் குறித்தும் எடுத்துரைத்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 July 2024, 14:10