தேடுதல்

பாலஸ்தீன மக்கள் பாலஸ்தீன மக்கள்  (ANSA)

பாலஸ்தீனிய புலம்பெயர்ந்தோரின் தேவைகள் பூர்த்தி செய்யப்பட....

தேவையிலிருப்பவர்களுக்கு உதவ அயராத முயற்சிகளில் ஈடுபட்டுள்ள மனிதாபிமான பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது அனைத்து தரப்பினரின் கடமை

மெரினா ராஜ் - வத்திக்கான்

மத்திய கிழக்கில் துன்புறும் 50 இலட்சத்திற்கும் அதிகமான பாலஸ்தீனிய புலம்பெயர்ந்தோரின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் UNRWA எனப்படும் ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் துயர்துடைப்புப்பணி அமைப்பின் முக்கிய பங்கை திருப்பீடம் மீண்டும் வலியுறுத்த விரும்புகிறது என்று கூறினார் பேராயர் கபிரியேலே காச்சா.

அண்மையில் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் பொதுஅவையின் தற்காலிகக் குழு கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய போது இவ்வாறு கூறினார் ஐ.நா.விற்கான திருப்பீட பிரதிநிதி, பேராயர் கபிரியேலே காச்சா.

2023 ஆம் ஆண்டு அக்டோபர் 7 ஆம் நாள் நடைபெற்ற இஸ்ரேலிய மக்களுக்கு எதிரான கொடூரமான பயங்கரவாதத் தாக்குதல்கள், இஸ்ரேலிலும் பாலஸ்தீனத்திலும் எண்ணற்ற மக்களின் வாழ்வில் ஆழமான எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்று கூறிய பேராயர் காச்சா அவர்கள், பாலஸ்தீனிய புலம்பெயர்ந்தோருக்கு நிவாரணம் மற்றும் வேலைவாய்ப்புக்கான தன்னார்வ பங்களிப்புகளை வழங்கவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

எல்லா இடங்களிலும் போர்நிறுத்தம், காசாவில் உள்ள இஸ்ரேலிய பிணையக்கைதிகள் உடனடியாக விடுவிக்கப்படல், பாலஸ்தீன மக்களுக்கு அத்தியாவசிய உதவிகளை தடையின்றி வழங்குதல், பன்னாட்டு மனிதாபிமானச் சட்டத்தை அனைத்து தரப்பினரும் விதிவிலக்கு இல்லாமல் மதித்தல் போன்றவற்றையும் திருப்பீடம் வலியுறுத்துவதாக எடுத்துரைத்தார் பேராயர் காச்சா.

தேவையிலிருப்பவர்களுக்கு உதவ அயராத முயற்சிகளில் ஈடுபட்டுள்ள மனிதாபிமான பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது அனைத்து தரப்பினரின் கடமை என்று வலியுறுத்திய பேராயர் காச்சா அவர்கள், "பாலஸ்தீனமும் இஸ்ரேலும் ஒன்றோடு ஒன்று இணைந்து வாழக்கூடிய நிலையான அமைதியை அடைவதற்கு நாம் அனைவரும் அர்ப்பணிப்புடன் உழைக்க வேண்டும் என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் கருத்துக்களை மேற்கோள்காட்டினார்.

1948 அரபு-இஸ்ரேல் போரின் காரணமாக இடம்பெயர்ந்த பாலஸ்தீனிய புலம்பெயர்ந்தோருக்கு உதவி வழங்குவதற்கான நோக்கமுடன் 1949-ஆம் ஆண்டில் UNRWA எனப்படும் ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் துயர்துடைப்புப்பணி அமைப்பு நிறுவப்பட்டது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 July 2024, 13:38