உக்ரைனில் தாக்குதலுக்குள்ளான மருத்துவமனைக்குச் சென்றார் கர்தினால் பரோலின்
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
இம்மாதம் 8-ஆம் தேதி, செவ்வாயன்று, இரஷ்யாவின் ஏவுகணைகளால் தாக்கப்பட்ட, உக்ரைன் நாட்டின் கீவ் நகரில் உள்ள மிகப்பெரும் குழந்தைகள் மருத்துவமனை உட்பட இரு மருத்துவமனைகளைப் பார்வையிட்டார் திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின்.
ஜூலை 23, இச்செவ்வாயன்று, அந்நாட்டு அரசுத் தலைவர் வோலோதிமிர் ஜெலென்ஸ்கி அவர்களைச் சந்தித்த பிறகு, குழந்தைகள் மருத்துவமனையைப் பார்வையிட வந்த கர்தினால் பரோலின் அவர்களை, உக்ரேனிய நல அமைச்சர் விக்டர் லியாஷ்கோ, மருத்துவமனையின் பொது இயக்குனர் வோலோதிமிர் சோவ்னிர் ஆகியோர் வரவேற்றனர்.
அதனைத் தொடர்ந்து கர்தினால் பரோலின் அவர்களுடனான கலந்துரையாலில், அவர்கள் மருத்துவமனையின் செயல்பாடுகள் மற்றும் இரஷ்யாவின் ஏவுகணை தாக்குதலால் ஏற்பட்ட அழிவுகள் குறித்து அவரிடம் எடுத்துரைத்தனர்.
அதன்பிறகு அங்கிருந்த புறப்பட்டு கியேவில் உள்ள புனித சோபியா அருங்காட்சியக வளாகத்திற்குச் சென்ற கர்தினால் பரோலின் அவர்களை, அவ்வருங்காட்சியகத்தின் பொது இயக்குனர் நெலியா குகோவல்ஸ்கா வரவேற்றார். இறுதியில் அங்கிருந்த பார்வையாளர் புத்தகத்தில் தனது அனுபவத்தை எழுதி கையெழுத்திட்டு அங்கிருந்து சென்றார் கர்தினால்.
ஜூலை 8-ஆம் தேதி நிகழ்ந்த இரஷ்யாவின் இந்த ஏவுகணை தாக்குதலின்போது 627 குழந்தைகள் மருத்துவமனையில் இருந்தனர். இதில் ஒரு மருத்துவர் உட்பட இருவர் இறந்தனர், 50 பேர் காயமடைந்தனர், அவர்களில் எட்டு பேர் சிறார்கள். கூடுதலாக, 94 குழந்தைகள் கியேவில் உள்ள மற்ற மருத்துவமனைகளுக்கு சிகிச்சை வசதிகளுக்காக மாற்றப்பட்டனர்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்