மனித மாண்பு மதிக்கப்படுவதற்கு போராடும் திருஅவை
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
தற்கொலைக்கு உதவுதல், மற்றும் கருணைக்கொலைக்கு தன் வன்மையான எதிர்ப்பை மீண்டும் உறுதி செய்யும் திருஅவை, மனித மாண்பு மதிக்கப்படுவதற்கு தீவிரமுடன் போராடுவதாகத் தெரிவித்தார் பேராயர் Vincenzo Paglia.
வாழ்வை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்புடைய நன்னெறிக் கொள்கைகளை விவாதிக்கும் சிறிய சொற்களஞ்சியம் ஒன்று அண்மையில் வத்திக்கான் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது குறித்து தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்ட, வாழ்வுக்கான திருப்பீடக்கழகத்தின் தலைவர் பேராயர் பாலியா அவர்கள், கருணைக்கொலை மற்றும் தற்கொலைக்கு உதவுதல் குறித்தவைகளில் திருப்பீடம் உறுதியாக உள்ளது என எடுத்துரைத்தார்.
வியாழனன்று திருத்தந்தையை நேரில் சந்தித்து இந்த சொற்களஞ்சியத்தை வழங்கிய பேராயர் பாலியா அவர்கள், அதன்பின் வத்திக்கான் செய்திகளுக்கு வழங்கிய நேர்முகத்தில், கடந்த 70 ஆண்டுகளாக திருத்தந்தையரின் மற்றும் திருஅவையின் படிப்பினைகளில் காணப்படும் கருணைக்கொலை மற்றும் தற்கொலைக்கு உதவுதல் போன்றவைகள் குறித்த எதிர்ப்பில் எவ்வித மாற்றமும் இல்லை என எடுத்துரைத்தார்.
88 பக்கங்களைக் கொண்ட இந்த சிறிய சொற்களஞ்சியம், 1957ஆம் ஆண்டு திருத்தந்தை 12ஆம் பயஸ் அவர்களின் காலத்திலிருந்து இன்று வரையுள்ள திருஅவைப் படிப்பினைகளை மேற்கோள் காட்டி எழுதப்பட்டுள்ளது.
வாழ்வின் ஆயுள் காலத்தை குறைக்க எவரும் முயலக்கூடாது என்ற பேராயர், ஒருவர் ஒருவர் மீதான அக்கறையுடன் நாம் அனைவரையும் வாழவைக்க முயலவேண்டும் என்ற விண்ணப்பத்தை முன்வைத்ததுடன், சமூகத்தின் பொதுநலனுக்காக ஒத்துழைப்பை வழங்கும் திருஅவை, சட்டங்களை உருவாக்குவதில் அல்ல, மாறாக மனச்சான்றை வடிவமைப்பதிலேயே தன் பங்களிப்பை வழங்குகிறது எனவும் தெரிவித்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்