கர்தினால் பரோலின் மற்றும் ஈரான் அதிபரின் தொலைபேசி உரையாடல்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
ஆகஸ்ட் 12, இத்திங்களன்று காலை, ஈரான் இஸ்லாமியக் குடியரசின் தலைவர் மசூத் பெசெஷ்கியானுடன் திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் தொலைபேசியில் உரையாடினார் என்று திருப்பீடச் செய்தித் தொடர்பகம் தெரிவித்துள்ளது.
பத்திரிகையாளர் சந்திப்பின்போது, இந்தத் தகவலை வழங்கிய திருப்பீடச் செய்தித் தொடர்பகத்தின் இயக்குநர் மத்தேயோ புரூனி அவர்கள், ஈரானில் புதிய அரசுத் தலைவரின் பதவிக்காலம் தொடங்கும் வேளை அவருக்கு வாழ்த்துத் தெரிவிக்கும் பொருட்டு இநதத் தொலைபேசி உரையாடல் இடம்பெற்றதாகக் கூறினார்.
இந்த உரையாடலின் போது, மத்திய கிழக்கில் நிகழ்ந்துவரும் மோதல்கள் குறித்து திருப்பீடத்தின் ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்திய கர்தினால் பரோலின் அவர்கள், அம்மோதல்கள் தொடர்ந்து விரிவுபடுத்தப்பட்டு வருவதை தவிர்க்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியதுடன், அதற்குப் பதிலாக, உரையாடல், பேச்சுவார்த்தை மற்றும் அமைதிக்கான முயற்சிகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.
திருத்தந்தையின் வேண்டுகோள்
கடந்த புதன்கிழமை இடம்பெற்ற திருத்தந்தையின் பொதுமறைக்கல்வி உரையின் முடிவில், மத்திய கிழக்கின் நிலைமையை மிகுந்த கவலையுடன் உற்றுநோக்குவதாகக் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த மோதல்களைத் தவிர்க்க முயற்சிகள் எடுக்குமாறு இதில் சம்மந்தப்பட்டுள்ள அனைவரையும் கேட்டுக்கொண்டார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்