இறைவனின் மறைப்பணிக்கு தாழ்மையுடன் செவிசாய்க்கும் பயணம்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
வரும் திங்களன்று, அதாவது செப்டம்பர் 2ஆம் தேதி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் துவங்கும் ஆசியா மற்றும் ஓசியானியாவுக்கான திருத்தூதுப்பயணம், இறைவன் அழைக்கும் மறைப்பணிக்கு தாழ்மையுடன் செவிசாய்ப்பதாக இருக்கும் என உரைத்தார் கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே.
செப்டம்பர் மாத முதல் இரண்டு வாரங்களில் இந்தோனேசியா, பாப்புவா நியூ கினி,, கிழக்கு திமோர், சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் திருத்தூதுப்பயணத்தை மேற்கொள்ளவுள்ளது குறித்து வத்திக்கானின் பிதெஸ் செய்தி நிறுவனத்திற்கு அளித்த நேர்முகத்தில் தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்ட நற்செய்தி அறிவிப்புக்கான திருப்பீடத்துறையின் இணைத்தலைவர் கர்தினால் தாக்லே அவர்கள், 40 ஆயிரம் கிலோமீட்டர்களை உள்ளடக்கிய இடங்களில் இடம்பெறும் திருத்தந்தையின் திருப்பயணம், அமைதியின் மீது அக்கறைக் கொண்டுள்ள அனைவர் மீதும் ஒரு பாதிப்பை ஏற்படுத்துவதாக இருக்கும் என்ற நம்பிக்கையை வெளியிட்டார்.
இவ்வாண்டு டிசம்பர் மாதத்தில் 88 வயதைத் துவக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த முதிர்ந்த வயதிலும் சோர்வுதரும் திருத்தூதுப் பயணங்களை மேற்கொள்வது, அனைத்துப் பகுதி மக்களையும் சென்று சந்திக்கும் அவரின் தந்தைக்குரிய நெருக்கத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது என்றார் கர்தினால் தாக்லே.
திருத்தந்தை மேற்கொள்ளும் திருப்பயணங்களில் வரும் நாடுகளில் கத்தோலிக்கர்களின் எண்ணிக்கை சிறிதேயெனினும், உடன்பிறந்த உணர்வு நிலை குறித்தும், இயற்கையை பராமரிக்க வேண்டிய அவசியம் குறித்தும் கொண்டிருக்கும் கருத்துக்களுக்காக திருத்தந்தை, அரசுகளால் வரவேற்கப்படுவதும் உண்மை என்றார் நற்செய்தி அறிவுப்புக்கான திருப்பீடத்துறையின் இணைத்தலைவர் கர்தினால் தாக்லே.
திருத்தந்தை திருத்தூதுப்பயணம் மேற்கொள்ளவிருக்கும் இரண்டு கண்டங்களின் நான்கு நாடுகளில் தலத்திருஅவைகளின் நிலை குறித்தும் பிதெஸ் செய்தி நிறுவனத்துடனான தன் நேர்முகத்தின்போது கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார் நற்செய்தி அறிவிப்புக்கான திருப்பீடத்துறையின் இணைத்தலைவர் கர்தினால் தாக்லே.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்