தேடுதல்

ரிமினி கூட்டத்தில் பேராயர் பிசிக்கெல்லா ரிமினி கூட்டத்தில் பேராயர் பிசிக்கெல்லா 

இன்றைய சூழலில் யூபிலி என்பது நம்பிக்கையின் பாதையாக உள்ளது

மற்றவர்களுக்கு வழங்குபவர்களாகவும், பங்கேற்பவர்களாகவும், ஒன்றிப்பின் அடையாளமாகவும் இருப்பதை நம்பிக்கை எதிர்பார்க்கிறது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

உட்பகை மற்றும் பழிவாங்கல்களின் இன்றைய சூழலில் யூபிலி என்பது நம்பிக்கையின் பாதையாக உள்ளது என்றார் நற்செய்தி அறிவிப்புக்கான திருப்பீடத்துறையின் இணைத் தலைவர் பேராயர் ரீனோ பிசிக்கெல்லா.

இத்தாலியின் ரிமினியில் இடம்பெறும், "மக்கள் மத்தியில் நட்புறவை வளர்த்தல்" என்ற 45 ஆவது கூட்டத்தில் உரையாற்றிய பேராயர் பிசிக்கெல்லா அவர்கள்,  யூபிலி ஆண்டு தொடர்பில் நம்பிக்கையின் உயர் மதிப்பீடு குறித்தும் இறைமன்னிப்பின் முக்கியத்துவம் குறித்தும் எடுத்துரைத்தார்.

நம்பிக்கை நம்மை ஏமாற்றாது என்ற வார்த்தைகளுடன் திருத்தந்தை 2025ஆம் ஆண்டு யூபிலியை அறிவித்துள்ளதை சுட்டிக்காட்டிய, இந்த யூபிலி ஆண்டு நிகழ்வுகளுக்குப் பொறுப்பான பேராயர் பிசிக்கெல்லா அவர்கள், நம்பிக்கையின்றி நாம் வாழ்வின் அடிப்படைகளை ஒரு நாளும் புரிந்துகொள்ள முடியாது எனவும் எடுத்துரைத்தார்.

நாம் நம் வாழ்வில் மற்றவர்களுக்கு வழங்குபவர்களாகவும், பங்கேற்பவர்களாகவும், ஒன்றிப்பின் அடையாளமாக செயல்படுபவர்களாகவும், நம்பிக்கையின் உறுதியான அடையாளங்களாகவும் இருப்பதை நம்பிக்கை எதிர்பார்க்கிறது எனவும் இக்கூட்டத்தில் எடுத்துரைத்தார் பேராயர்.

மன்னிப்பு என்பது பழையதை மாற்றியமைப்பதில்லை, ஆனால் வருங்காலத்தை செப்பனிட உதவுகிறது என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வார்த்தைகளை மேற்கோள்காட்டிய பேராயர் பிசிக்கெல்லா அவர்கள், வன்முறைகளும் பழிவாங்கல்களும் நிறைந்த இன்றைய சூழல்களில் மன்னிப்பையும் நம்பிக்கையையும் கொணர்வதாக யூபிலி ஆண்டு உள்ளது என மேலும் எடுத்துரைத்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 August 2024, 14:38