தேடுதல்

பேராயர் எத்தோரே பலஸ்தெரேரோ பேராயர் எத்தோரே பலஸ்தெரேரோ 

தொழில் நுட்ப வளர்ச்சி மனித வாழ்வை அழிக்க அல்ல

உயிரைப் பறிக்கும் சக்தி வாய்ந்த கருவிகளை ஆய்வு செய்யக் கூடிய சோதனைக் களமாக போர்க்களங்கள் உருவாகி வருவது குறித்து திருப்பீடம் கவலை.

ஜெர்சிலின் டிக்ரோஸ் – வத்திக்கான்

தொழில் நுட்ப வளர்ச்சியானது மனித வாழ்வை மேம்படுத்த பயன்படுத்தப்பட வேண்டுமேயொழிய, அது மனித வாழ்வை அழிக்க அனுமதிக்கக் கூடாது என்று  கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வார்த்தைகளை மேற்கோள்காட்டி அண்மையில் ஜெனிவாவில் நடைபெற்ற ஐ.நா. கூட்டத்தில் உரையாற்றினார் பேராயர் எத்தோரே பலஸ்தெரேரோ.

ஜெனீவாவில் உள்ள ஐ.நா. நிறுவனங்கள் மற்றும் பிற பன்னாட்டு நிறுவனங்களுக்கான திருப்பீடப் பிரதிநிதி பேராயர் பலஸ்தெரேரோ அவர்கள், இன்றைய உலகில், கொல்லும் தானியங்கி ஆயுத அமைப்பு முறையை உருவாக்குவது குறித்து கவலையை வெளியிட்டதுடன், அவைகளை கொல்லும் ரோபோக்கள் எனவும் அழைத்தார்.

2024 ஜூன் மாதம் G7 மாநாட்டின் தலைவர்களுக்கு திருத்தந்தை அவர்கள், உயிரைப் பறிக்கும் தானியங்கி ஆயுதங்களைத் தடை செய்வது பற்றி கூறிய வார்த்தைகளை நினைவு கூர்ந்ததுடன், கருவிகள் ஒருபோதும் மனித குலத்தை அழிக்க முடியாது என்றும், மனிதர்கள் எப்பொழுதும் கருவிகளை தங்கள் கட்டுபாட்டின்கீழ்  வைத்திருக்க வேண்டும் என்றும் திருத்தந்தை கூறியுள்ள வார்த்தைகளையும் நினைவுபடுத்தினார் பேராயர் பலஸ்தெரேரோ.

AI என்ற செயற்கை நுண்ணறிவின் வழி ஆயுதமயமாக்கல், வளர்ச்சி மற்றும் பயன்பாடுகளை சட்டத்திற்கு கட்டுப்பட்ட ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்ற பேராயர் அவர்கள், இந்த உயிரைப் பறிக்கும் சக்தி வாய்ந்த கருவிகளை சோதனை செய்து பயன்படுத்திக் கொண்டிருக்கும் நாடுகள், இவைகளை மேலும் ஆய்வு செய்யக் கூடிய சோதனைக் களமாக போர்க்களங்களை உருவாக்கி வருவது குறித்தும் கவலையை வெளியிட்டார்.

தொழில்நுட்பத்தின் பாதுகாப்பு அம்சம், ஆயுதமயமாக்கல் என்பவை, பன்னாட்டு விதிமுறைகள் மற்றும் சட்டங்களின் அடிப்படையில் சரியான முறையில் இயக்கப்படுகின்றனவா என ஆய்வு செய்யும்  ஐ.நா. நிறுவனத்தின் முயற்சியில் திருப்பீடம் துணை நிற்பதாக பேராயர் பலஸ்தெரேரோ கூறினார்.

தேர்ந்தெடுத்தல் மற்றும் முடிவெடுத்தலுக்கு இடையேயான நன்னெறி வேறுபாட்டையும் சுட்டிக்காட்டிய பேராயர் பலஸ்தெரேரோ அவர்கள், முடிவெடுத்தல் என்பது மதிப்பீடுகள் மற்றும் கடமைகளை உள்ளடக்கிய, தேர்ந்தெடுத்தலைக் கடந்த ஒரு நடைமுறை சோதனையாகும் என்றும் கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 August 2024, 17:52