நம்பிக்கையின் மனிதர் அருளாளர் ஜான் ஹாவ்லிக்
மெரினா ராஜ் - வத்திக்கான்
அருளாளர் Ján Havlík சமநிலையான மனிதர், மகிழ்ச்சியான நபர், நம்பிக்கையின் மனிதர், மற்றவர்களின் தேவைகளில் திறந்த மனம் மற்றும் கவனமுள்ளவர் என்றும், தன்னை சிறையில் துன்புறுத்தியவர்களை மன்னித்து, இறைத்தந்தையை மகிமைப்படுத்தி தனது வாழ்வைத் துறந்து மறைசாட்சியாக மரித்தவர் என்றும் கூறினார் கர்தினால் மர்செல்லோ செமராரோ.
ஆகஸ்டு 31, சனிக்கிழமை பிராட்டிஸ்லாவாவில் உள்ள தூய வியாகுல அன்னை திருத்தல வளாகத்தில் நடைபெற்ற இறை ஊழியர் Ján Havlík அவர்களின் அருளாளர் பட்ட திருப்பலியின்போது ஆற்றிய மறையுரையில் இவ்வாறு கூறினார் புனிதர் பட்ட நிலைகளுக்குரிய திருப்பீடத் துறையின் தலைவர் கர்தினால் மர்செல்லோ செமராரோ.
கிறிஸ்துவின் அன்பிலிருந்து நம்மைப் பிரிக்கக் கூடியது எது? வேதனையா? நெருக்கடியா? இன்னலா? பட்டினியா? ஆடையின்மையா? இடரா? சாவா? எதுதான் நம்மைப் பிரிக்க முடியும்? என்ற திருத்தூதர் பவுலின் வார்த்தைகளை மேற்கோள்காட்டிய கர்தினால் செமராரோ அவர்கள், கிறிஸ்துவின் அன்பின் வலிமை நமது பலவீனத்தை வெல்லும், அன்பின் ஆற்றல் நமது பயத்தை வெல்லும், அன்பின் ஒளி இருளை வெல்லும் என்றும் சுட்டிக்காட்டினார்.
நம்பிக்கையான மனிதரான அருளாளர் ஜான் ஹவ்லிக் அவர்கள், அந்த நம்பிக்கையினாலே தனது பணியை நிலைநிறுத்தினார் என்றும் நம்பிக்கையின் அடையாளமாகவும், ஏழை எளிய மக்களுக்கு உதவுவதில் புனித வின்சென்தேன்பவுலின் சீடராக தன்னை கையளித்தவர் என்றும் எடுத்துரைத்தார் கர்தினால் செமராரோ.
ஏழைகள் துன்பப்படுபவர்கள், கைவிடப்பட்டவர்களின் நம்பிக்கையான தூய வின்சென்சோ பவுலின் வார்த்தைகளான “ஒளியூட்டுகின்ற வெப்பமூட்டுகின்ற சூரிய ஒளியைப் போன்று நாம் இருக்க வேண்டும், அந்த ஒளியானது அசுத்தமானவற்றைக் கடந்து வந்தாலும் அது ஒருபோதும் அழுக்காகாது” என்ற வரிகளை நினைவில் கொண்டு வாழ்ந்தவர் அருளாளர் ஜான் என்றும் கூறினார் கர்தினால் செமராரோ.
துன்பங்களை பகிர்ந்து கொள்ளும்போதும், அதை அனுபவிக்கும்போதும் நம்பிக்கையுடன் மற்றவர்களையும் துன்பத்தை துணிவுடன் ஏற்றுக்கொள்ள ஊக்கப்படுத்தியவர் அருளாளார் ஜான் என்றும், இதன் வழியாக தனது ஆன்மிக ஆழத்தை மிகத் தீவிரமான முறையில் வெளிப்படுத்தியவர் அவர் என்றும் கூறினார் கர்தினால் செமராரோ.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்