மதங்களுக்கு இடையிலான உறவுகள் தாழ்வான நிலையை எட்டியுள்ளன
மெரினா ராஜ் - வத்திக்கான்
காசாவில் போர் தொடங்கி முந்நூறு நாட்களைக் கடந்த பிறகு, மதங்களுக்கு இடையிலான உறவுகள் தாழ்வான நிலையை எட்டியுள்ளன என்றும், கிறிஸ்தவர்கள், யூதர்கள் மற்றும் முஸ்லிம்கள் ஒருவரையொருவர் வெளிப்படையாக சந்திப்பதும் உரையாடுவதும் கடினமாக உள்ளது என்றும் கூறியுள்ளார் முதுபெரும்தந்தை பியர்பத்திஸ்தா பீஸ்ஸபால்லா.
ஆகஸ்ட் 21 புதன்கிழமை ரிமினியில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் 45 ஆவது "மக்கள் மத்தியில் நட்புறவை வளர்த்தல்" கூட்டத்தில் பங்கேற்று தனது கருத்துக்களை வழங்கியபோது இவ்வாறு கூறியுள்ளார் எருசலேமின் இலத்தீன் வழிபாட்டுமுறை முதுபெரும்தந்தை கர்தினால் பியர்பத்திஸ்தா பிஸ்ஸபால்லா.
புனித பூமியில் உள்ள மத மற்றும் சமூகங்களுக்கிடையேயான உரையாடல் "நெருக்கடியில் உள்ளது" என்று தெரிவித்துள்ள முதுபெரும்தந்தை Pierbattista Pizzaballa அவர்கள், 2019 ஆம் ஆண்டில் திருத்தந்தை பிரான்சிஸ் மற்றும் Sheikh Ahmad el-Tayeb, Al-Azhar இமாம் ஆகியோர் கையெழுத்திட்ட மனித உடன்பிறந்த உறவுக்கான ஆவணத்தை சுட்டிக்காட்டி மதங்களுக்கு இடையிலான உரையாடல் மற்றும் உறவுகளின் புதிய கட்டத்தை நாம் தொடங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
அவநம்பிக்கை, வெறுப்பு, ஆழ்ந்த அவமதிப்பு போன்ற அணுகுமுறைகளிலிருந்து நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்புவது ஒரு மகத்தான முயற்சியாக இருக்கும் என்று தெரிவித்துள்ள முதுபெரும்தந்தை அவர்கள், மதங்களுக்கிடையேயான உரையாடல் செல்வாக்கு படைத்தவருக்குக் குறைவாகவும், அடிமட்ட சமூகத்தில் வாழும் மக்கள் மத்தியில் அதிகமாகவும் இருக்க வேண்டும்; அது அவர்களைச் சென்றடைய வேண்டும்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.
பிற மதச் சமூகங்களின் குரலுக்கு செவிசாய்த்தல், அவர்களின் நம்பிக்கையை அடையாளப்படுத்துதல், தனது சொந்த கதைக்குள் தன்னை மூடிக்கொள்ளாமல், மற்றவரைப் பார்த்தல், அடையாளம் காணுதல், அவர்களின் பார்வையை உயர்த்துதல் மற்றும் உதவுதல் போன்றவற்றிற்கு மதத் தலைவர்களுக்கு ஒரு பெரிய பொறுப்பு உள்ளது என்றும் வலியுறுத்தியுள்ளார் முதுபெரும்தந்தை Pizzaballa..
மதங்கள் தனித்தனி தீவுகள் அல்ல என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும் என்றும், மன்னிப்பதே அத்தனை வன்முறைகளையும் சமாளிப்பதற்கான ஒரே வழி என்றும் கூறியுள்ளார் முதுபெரும்தந்தை Pierbattista Pizzaballa.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்