தேடுதல்

அசிசி தூய கிளாரா திருத்தலத்தில் கர்தினால் பரோலின் அசிசி தூய கிளாரா திருத்தலத்தில் கர்தினால் பரோலின் 

சகோதர உறவு மற்றும் அமைதிக்காக வாழ்ந்தவர் தூய கிளாரா

உலகின் அன்பிற்கான வறுமையும், ஏக்கமும் அதிகரித்து வருகின்றன, எனவே உலக மக்கள் அனைவரும் ஒருவர் மற்றவரை அன்பு செய்து வாழ வேண்டும்

மெரினா ராஜ் - வத்திக்கான்

நுகர்வு, மாசுபாடு, தன்னலம், கட்டுப்பாடற்ற தேவைகள், விளம்பரம், சமூகப்பிரதிபலிப்பு போன்றவற்றை மிக உயர்வாகக் கருதுகின்ற நாம் வாழும் இச்சமூகத்தில், நல்வாழ்க்கையின் முன்உதாரணமாகத் திகழ்ந்தவர் தூய கிளாரா என்றும், தன்னைத்தானே துறந்து சகோதர உறவு மற்றும் அமைதிக்காக வாழ்ந்த அப்புனிதர் போல வாழ நாமும் முயற்சிக்க வேண்டும் என்றும் கூறினார் கர்தினால் பியத்ரோ பரோலின்.

ஆகஸ்ட் 11 தூய கிளாரா திருவிழாவை முன்னிட்டு அசிசியின் உம்ப்ராவில் உள்ள தூய கிளாரா திருத்தலத்தில் நிறைவேற்றிய திருப்பலியின்போது இவ்வாறு கூறினார் திருப்பீடச்செயலர் கர்தினால் பியத்ரோ பரோலின்.

தூய பிரான்சிஸ் மற்றும் தூய கிளாரா இவ்வுலகப் பொருள்கள் மீதானப் பற்று, தன்னலம், இல்லாது வாழ்ந்தவர்கள் என்று எடுத்துரைத்த கர்தினால் பரோலின் அவர்கள், பிறருக்காகத் தங்களது உள்ளத்தைத் திறந்து சகோதர அன்புடனும் அமைதிக்கான நல் விருப்பத்துடன் இவ்வுலகில் வாழ்ந்தவர்கள் அவர்கள் என்றும் எடுத்துரைத்தார்.

அசிசியில் உள்ள தூய கிளாரா திருத்தலத்தில் இருந்து உலக நாடுகளின் அமைதிக்காக செபிக்கும்படி வலியுறுத்திய கர்தினால் பரோலின் அவர்கள், அண்மையில் உக்ரைனின் குர்ஸ்கில் நடைபெற்ற தாக்குதல் குறித்த தனது கவலையைத் தெரிவித்து கவலைக்குரிய இச்செயல்கள் அமைதிக்கான பின்வாங்குதலை வெளிப்படுத்துவதாகவும் கூறினார்.

உலகில் அன்பு செலுத்த வேண்டியதன் அவசியத்தை வெளிப்படுத்திய கர்தினால் பரோலின் அவர்கள், உலகின் அன்பிற்கான வறுமையும், ஏக்கமும் அதிகரித்து வருகின்றன, எனவே உலக மக்கள் அனைவரும் ஒருவர் மற்றவரை அன்பு செய்து வாழ வேண்டும் என்றும் வலியுறுத்தினார்

நுகர்வு, விளம்பரம், தேவைகளை திருப்திப்படுத்தும் தடையற்ற விருப்பம், சமூகப் பிரதிபலிப்பு, தவிர்க்க முடியாத பொருளாதார கழிவுகள், மாசுபாடு மற்றும் தன்னல இன்பத்தை மனிதனின் உயர்ந்த நன்மையாகவும், வாழ்க்கையின் முக்கியமான குறிக்கோளாகவும் கருதும் இவ்வுலகில் தூய கிளாரா சமூக வாழ்க்கையில் சிறந்த எடுத்துக்காட்டு என்றும் கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 August 2024, 11:46