தேடுதல்

முனைவர் பவுலோ ரூஃபினி முனைவர் பவுலோ ரூஃபினி  

செயற்கை நுண்ணறிவு குறித்த விழிப்புணர்வு வேண்டும்! - பவுலோ ரூஃபினி

இந்த மாநாட்டின்போது செயற்கை நுண்ணறிவு பற்றிய விவாதத்தை வெறும் தொழில்நுட்பப் பிரச்சினையாக மட்டுமில்லாமல், திருஅவையின் தீவிர ஈடுபாடு தேவைப்படும் ஆழ்ந்த தார்மீக மற்றும் தத்துவ அக்கறையாகவும் வடிவமைத்தார் முனைவர் ரூஃபினி.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

இலக்கமுறை உலகம் (digital) என்பது எப்போதும் ஆயத்த நிலையில் இருப்பதில்லை, மாறாக அது ஒவ்வொரு நாளும் மாறிக்கொண்டே இருக்கிறது. அதை மாற்றவும் வடிவமைக்கவும் நம்மால் முடியும். ஆகவே, அன்புடனும் மனித அறிவுடனும் அதைச் செய்வதற்குக் கத்தோலிக்கத் தொடர்பாளர்கள் தேவை என்று கூறினார் திருப்பீட சமூகத்தொடர்புத் துறையின் தலைவர் முனைவர் பவுலோ ரூஃபினி (Paolo Ruffini).

ஆகஸ்ட் 5, இத்திங்களன்று, மணிலாவின் தெற்கில் உள்ள லிபா நகரில் இடம்பெற்று வரும் 7-வது தேசிய கத்தோலிக்கச் சமூகத் தொடர்புகள் மாநாட்டில் (NCSCC) ஆற்றிய பதிவு செய்யப்பட்ட உரையில் இவ்வாறு உரைத்தார் முனைவர் ரூஃபினி.

எனவே, அடிப்படை கேள்வி என்பது இயந்திரங்களைப் பற்றியது அல்ல, ஆனால் மனிதர்களைப் பற்றியது, நம்மைப் பற்றியது என்று குறிப்பிட்ட  முனைவர் ரூஃபினி அவர்கள், சுதந்திரம், மனிதர்களுக்கு இடையேயான சந்திப்பின் அருஞ்செயல், எதிர்பாராத வியப்பு, மனமாற்றம், அறிவார்ந்ததனத்தின் வெளிப்பாடு, விலைமதிப்பற்ற அன்பு போன்ற ஒரு தொழில்நுட்பத்தால் மாற்ற முடியாத விடயங்கள் எப்போதும் இருக்கும் என்றும் குறிப்பிட்டார்.

நமக்கு விதிகள் தேவை, நெறிமுறைகள் தேவை, தத்துவ மற்றும் இறையியல் சிந்தனை தேவை, தொழில்நுட்பம் மட்டுமல்லாது, அதற்கு அப்பாலும் நாம் பார்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்ட முனைவர் ரூஃபினி அவர்கள், நமக்கு விழிப்புணர்வும் பொறுப்பும் தேவை என்றும், செயற்கை நுண்ணறிவு அரசியலுக்கும், தத்துவஞானிகளுக்கும், கல்வியாளர்களுக்கும், மேலும் திருஅவைக்கும் சவால் விடுகிறது என்றும் குறிப்பிட்டார்.

செயற்கை நுண்ணறிவு என்னும் இந்தப் புதிய கருவி, தனிநபர்களுக்கும் சமூகங்களுக்கும் இடையேயான உறவை மேலும் ஒன்றிணைக்குமா, அல்லது, ஏற்கனவே தனிமையில் இருப்பவர்களின் தனிமையை அதிகரித்து, நம் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட தொடர்பை மட்டுமே வழங்கக்கூடிய அரவணைப்பை இழக்குமா?  என்று கேள்வி எழுப்பிய அவர், தகவல் வலிமையின் அடிப்படையில் புதிய படிநிலைகளை நிறுவுவதை விட, சமத்துவத்தை மேம்படுத்த செயற்கை நுண்ணறிவை உருவாக்க முடியுமா என்ற முக்கியமான பிரச்சினையையும் வலியுறுத்தினார்.

ஆகஸ்ட் 5 முதல் 8 வரை நடைபெறும் இந்த மாநாட்டில், நாடு முழுவதிலும் உள்ள 86 மறைமாவட்டங்களில் இருந்து 300-க்கும் மேற்பட்ட கத்தோலிக்கத் தகவல் தொடர்பாளர்கள் மற்றும் சமூகத் தொடர்பு அமைச்சர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 August 2024, 13:58