தாழ்ச்சியுள்ள மேய்ப்பரான அருளாளர் ஸ்தேஃபனோ துவாகி
மெரினா ராஜ் – வத்திக்கான்
அருளாளர் ஸ்தேஃபனோ துவாகி தாழ்ச்சியுள்ள மேய்ப்பர், கிழக்கத்திய மற்றும் மேற்கத்திய தலத்திருஅவைகளுக்கிடையே பாலமாக விளங்கியவர் என்றும், மாரனைட் வழிபாட்டு முறை புத்தகங்கள் பலவற்றை பாரம்பரியம் மற்றும் கத்தோலிக்க உண்மைக்கு ஏற்றவாறு மாற்றியமைத்தார் என்றும் கூறினார் கர்தினால் மர்செல்லோ செமெராரோ
ஆகஸ்ட் 2 வெள்ளிக்கிழமை மாலை லெபனோனின் Bkerkhé ஆலயத்தில் ஸ்தேஃபனோ துவாகி அவர்கள் புதிய அருளாளராக உயர்த்தப்பட்ட திருப்பலியில் ஆற்றிய மறையுரையின்போது இவ்வாறு கூறினார் அருளாளர், மற்றும், புனிதர்களாக உயர்த்தப்படும் வழிமுறைகளை ஒருங்கிணைக்கும் திருப்பீடத்துறையின் தலைவர் கர்தினால் மார்செல்லோ செமெராரோ
1650 ஆம் ஆண்டில், தத்துவத்தில் முனைவர் பட்டம் பெற்று லெபனானுக்குத் திரும்பிய அருளாளர் ஸ்தேபனோ அவர்கள், 1655ஆம் ஆண்டு ஏப்ரல் 3 லிருந்து குழந்தைகள் குறிப்பாக ஏழைகள் மற்றும் அனாதைகளுக்கு கற்பிக்கத் தொடங்கினார் என்றும், அக்குழந்தைகளுக்கான பள்ளி ஒன்றினை நிறுவியவர் என்றும் கூறினார்.
ஆயராக இருந்து தனக்கு கீழ் உள்ள மக்களை நன்கு பராமரித்து வந்தவர் அருளாளர் ஸ்தேபனோ என்றும், மரியாதை, புகழ் போன்றவற்றை எதிர்பார்க்காது தாழ்ச்சியுள்ளவராகவும் சமூகத்தின் உரிமைகளை பாதுக்காக்கும் விடயத்தில் வலிமை மற்றும் துணிவுள்ளவராகவும் திகழ்ந்தவர் என்றும் கூறினார் கர்தினால் செமெராரோ.
எளிமை, நிதானமுள்ள வாழ்க்கை, துறவு, உலக பற்றின்மை, கடவுளை நாடுதல் போன்ற நற்குணங்கள் கொண்டவராக திகழ்ந்தவர் அருளாளர் ஸ்தேபனோ என்றும் உண்மையான மற்றும் ஆழமான செல்வத்தைத் தேடுவதற்காக வீணான மற்றும் மாயையான செல்வங்களிலிருந்து விடுபடுங்கள் என்று தன் வாழ்வால் வலியுறுத்தியவர் என்றும் கூறினார் கர்தினால் செமெராரோ.
அருளாளர் ஸ்தேஃபனோ துவாகி இறந்து 400 ஆண்டுகளுக்குப் பின் அவர் அருளாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். ஆகஸ்ட் 2 வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற அருளாளர் பட்ட விழா திருப்பலியில் ஏறக்குறைய 13000 இறைமக்கள் பக்தியுடன் கலந்துகொண்டனர்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்