யூபிலி ஆண்டின் புனிதக் கதவுகள் திறக்கப்படும் விவரங்கள்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
2025ஆம் ஆண்டின் யூபிலிக் கொண்டாட்டங்களையொட்டி பேராலயங்களிலும் தேசிய திருத்தலங்களிலும் புனிதக் கதவுகள் திறக்கப்படுவது குறித்த விதிமுறைகளையும் விவரங்களையும் வெளியிட்டுள்ளது திருப்பீடம்.
வழக்கப்படி உரோம் நகரிலுள்ள 4 பாப்பிறை பெருங்கோவில்களிலும், திருத்தந்தையின் விருப்பப்படி, சிறைக்கைதிகளுடன் நெருக்கத்தை வெளிப்படும் விதமாக ஒரு சிறைச்சாலையிலும் புனிதக் கதவுகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை வெளியிட்ட திருப்பீடத்தின் நற்செய்தி அறிவிப்புக்கான துறை, ஜூபிலி ஆண்டின்போது உலகிலுள்ள மறைமாவட்ட பேராலயங்களிலும், பன்னாட்டு மற்றும் தேசிய திருத்தலங்களிலும், ஏனைய முக்கியத்துவம் நிறைந்த வழிபாட்டுதலங்களிலும் புனிதக் கதவுகள் திறக்கப்படும் என அதில் தெரிவிக்கிறது.
ஒப்புரவு அருள்சாதனம், பிறரன்பு மற்றும் நம்பிக்கை நடவடிக்கைகளின் வழி, இறைவனின் வரையறையற்ற அன்பிலிருந்து வரும் பாவமன்னிப்பை இந்த யூபிலி ஆண்டில் புனித கதவுகள் வழிச் செல்வது வழங்கும் என்பதைச் சுட்டிக்காட்டும் இந்த அறிக்கை, அருளின் இந்த நேரத்தை அனைவரும் முற்றிலுமாகப் பயன்படுத்தவேண்டும் எனவும் அழைப்புவிடுக்கிறது.
யூபிலி ஆண்டானது கிறிஸ்து பிறப்பு விழாவுக்கு முந்தைய நாளில் உரோம் நகர் புனித பேதுரு பெருங்கோவிலின் புனித கதவு திறக்கப்படுவதுடன் துவங்க உள்ளது.
அதன்பின் டிசம்பர் மாதம் 29ஆம் தேதி உரோம் மறைமாவட்ட பேராலயமான புனித ஜான் இலாத்ரன் பெருங்கோவில் புனித கதவு திறக்கப்படுவதைத் தொடர்ந்து, அதே நாளில் உலகிலுள்ள அனைத்து மறைமாவட்ட பேராலயங்கள் மற்றும் துணை பேராலயங்களின் புனித கதவுகள் திறக்கப்படும்.
இறைவனின் அன்னையாம் மரியன்னை திருவிழாவன்று, அதாவது ஜனவரி முதல் தேதி, உரோம் நகரின் புனித மேரி மேஜர் பெருங்கோவில் புனித கதவு திறக்கப்பட்டபின், ஜனவரி 5ஆம் தேதி, அதாவது திருக்காட்சி திருவிழாவுக்கு முந்தைய நாள், உரோம் நகரின் புனித பவுல் பெருங்கோவில் புனித கதவு திறக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
2025ஆம் ஆண்டு டிசம்பர் 28ஆம் தேதி புனித ஜான் இலாத்ரன், புனித மேரி மேஜர், புனித பவுல் பெருங்கோவில்களுடன் உலகின் அனைத்து மறைமாவட்ட பேராலயங்களின் கதவுகளும் மூடப்படும் என அறிவிக்கும் நற்செய்தி அறிவிப்புக்கான திருப்பீடத்துறை, 2026 ஜனவரி 6ஆம் தேதி திருக்காட்சி திருவிழா கொண்டாட்டத்தின்போது யூபிலி ஆண்டு அதிகாரப் பூர்வமாக நிறைவுக்கு வரும் எனவும் அறிவிக்கிறது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்