வெனிசுவேலாவில் தேர்தல் வெளிப்படைத்தன்மைக்கு திருப்பீடம் அழைப்பு
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
கடந்த ஞாயிறன்று வெனிசுவேலா நாட்டில் இடம்பெற்ற அரசுத்தலைவர் தேர்தலையொட்டிய வன்முறைகளில் ஏறக்குறைய 20 பேர் மரணமடைந்ததை குறிப்பிட்டு, அரசியல் தலைவர்களிடையே அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு அழைப்புவிடுத்துள்ளது திருப்பீடம்.
வெனிசுவேலாவின் அனைத்து அரசியல் தலைவர்களும் பேச்சுவார்த்தைகளிலும், அமைதி நடவடிக்கைகளிலும் தங்களை ஈடுபடுத்த வேண்டும் என அழைப்பு விடுத்த அமெரிக்க நாடுகளுக்கான திருப்பீட பிரதிநிதி பேரருள்திரு Juan Antonio Cruz Serrano அவர்கள், தேர்தலின் வெளிப்படைத்தன்மைக்கு வெனிசுவேலா நாட்டு ஆயர்கள் அழைப்புவிடுத்துள்ளதற்கு திருப்பீடமும் தன் ஆதரவை வழங்குகிறது என்றார்.
OAS என்ற அமெரிக்க நாடுகள் அமைப்பின் சிறப்புக் கூட்டத்தில் திருப்பீடத்தின் சார்பில் உரையாற்றிய பேரருள்திரு Cruz அவர்கள், வெனிசுவேலாவின் அண்மை அரசுத்தலைவர் தேர்தலில் அனைத்து மக்களும் ஆர்வத்துடனும், உயிர்துடிப்புடனும் கலந்துகொண்டது அவர்களின் ஜனநாயகக் கடமையைக் காண்பிக்கிறது என உரைத்ததுடன், தேர்தலின் வெளிப்படைத்தன்மைக்கு வெனிசுவேலா ஆயர்களுடன் இணைந்து அழைப்பு விடுப்பதாகவும் தெரிவித்தார்.
தேர்தலில் தற்போதைய அரசுத் தலைவர் Nicolás Maduro அவர்களே வென்றுள்ளதாக அரசு அறிவித்திருக்கின்றபோதிலும், அதனை தேர்தல் மோசடி என எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி ஏற்க மறுத்துவருகின்றன.
வெனிசுவேலா நாடு அண்மை தேர்தல் குறித்த வெளிப்படைத்தன்மையை காண்பிக்கவேண்டும் என அமெரிக்க நாடுகள் அமைப்பு கொண்டுவந்த தீர்மானம் நிறைவேற்றப்பட 18 நாடுகளின் ஆதரவு தேவைப்படும் நிலையில், 17 நாடுகளே ஆதரவளித்துள்ளன. 11 நாடுகள் வாக்கெடுப்பிலிருந்து விலகியிருந்தன.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்