தேடுதல்

ஞாயிறு திருப்பலியின்போது கர்தினால் மாரியோ செனாரி ஞாயிறு திருப்பலியின்போது கர்தினால் மாரியோ செனாரி 

சிரியாவில் ஏற்பட்டுள்ள வறுமை என்னும் பேரழிவு

போரினால் 5,00,000 பேர் உயிரிழந்துள்ளனர், 70 இலட்சத்திற்கும் அதிகமானோர் உள்நாட்டில் இடம்பெயர்ந்துள்ளனர், 50 இலட்சத்திற்கும் அதிகமானோர் அண்டை நாடுகளுக்குத் தப்பிச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

ஜெர்சிலின் டிக்ரோஸ் - வத்திக்கான்

சிரியா மக்கள் தங்கள் வாழ்க்கையில் சந்திக்கும்  துன்பங்கள் அனைத்தும்  சிலுவை போன்று கனமானதாகவும், கற்பனை செய்ய  முடியாத வகையிலும் உள்ளது என்றும்,  போரினால் ஏற்பட்டிருக்கிற வறுமை நிலையானது, மிகவும் மோசமான, நம்பிக்கைக்கு இடமளிக்காத பேரழிவு மிகுந்த ஒரு கடினமான சூழல் என்றும் கூறினார் கர்தினால் மாரியோ செனாரி.

செப்டம்பர் 22 ஞாயிற்றுக்கிழமை இத்தாலியின் Fornaci யில் உள்ள Santa Maria delle Grazie  ஆலயத்தில் நடைபெற்ற திருப்பலிக்குத் தலைமையேற்று மறையுரையாற்றியபோது இவ்வாறு கூறிய சிரியா அப்போஸ்தலிக்கத் தூதுவர் கர்தினால் மாரியோ செனாரி அவர்கள் வறுமையினால் சிரியா நாட்டு மக்கள் படும் துன்பங்களை மக்களிடம் பகிர்ந்து கொண்டார்.

உலகத்தின் பார்வையிலிருந்து மறக்கப்பட்ட ஒரு நாடாகிய சிரியாவின் அவல நிலையை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அவ்வப்போது உலகிற்கு நினைவூட்டி வருகிறார் என்றும், பத்தாண்டு காலமாக நடைபெற்று வரும் போரினால் மக்கள் மிகவும் சோர்வடைந்துள்ளனர் என்று அந்நாட்டு மக்களின் துன்பங்களையும் விவரித்தார் கர்தினால் செனாரி.

சிரியா மக்கள் மிகவும் சோர்வடைந்து விட்டனர்; அவர்கள் எதிர்காலத்தின் ஒளியைக் காண போராடுகிறார்கள் என்று கூறிய கர்தினால் செனாரி அவர்கள், இதுவரை போரினால் 5,00,000 பேர் உயிரிழந்துள்ளனர், 70 இலட்சத்திற்கும் அதிகமானோர் உள்நாட்டில் இடம்பெயர்ந்துள்ளனர், 50 இலட்சத்திற்கும்  அதிகமானோர் அண்டை நாடுகளுக்குத் தப்பிச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் என்னும் புள்ளிவிவரத்தையும் எடுத்துரைத்தார்.

இந்த புள்ளி விபரங்கள் சிரியா நாட்டு மக்களின் கடினமான எதார்த்த வாழ்வைப் பற்றி பேசுகின்றன என்று தனது வேதனையை தெரிவித்த கர்தினால் செனாரி அவர்கள்,  ஐக்கிய நாடுகள் அவையின் கூற்றுப்படி, 1 கோடியே 67 இலட்சம் சிரியர்கள் அவசர மனிதாபிமான உதவி தேவைப்படும் நிலையில் இருக்கின்றனர் என்றும், ஏறக்குறைய  1.3 கோடி  மக்கள் கடுமையான உணவுப் பற்றாக்குறையை எதிர்கொள்கின்றனர் என்றும் கூறினார்

கடந்த ஆண்டு போரின் வன்முறையால், மழை பனி என்னும் கடினமான காலச்சூழலைக் கூட கருத்தில் கொள்ளாது, தங்களால் சுமந்து செல்லக்கூடியதை மட்டுமே எடுத்துக்கொண்டு அந்நாட்டை  விட்டு தப்பியோடிய மக்களின் நிலையினை பகிர்ந்து அந்நிகழ்வானது பல மைல்களுக்கு நீண்டு செல்லும் சிலுவைப்பாதை என்றும் கூறினார் கர்தினால் செனாரி.

சிரிய ஆட்சி மீது விதிக்கப்பட்ட உலகளாவிய தடைகள், மக்கள் மீது பேரழிவு விளைவுகளை ஏற்படுத்தியுள்ளன என்று  சுட்டிக்காட்டிய கர்தினால் செனாரி அவர்கள், போர்ச் சூழலில் குறைந்தபட்ச ஒளியில் வாழ்ந்த மக்கள், வறுமை என்னும் பேரழிவினால் இருளில் மூழ்கியுள்ளனர் என்றும் கூறினார்.

மருந்து, உணவு, அடிப்படைத் தேவைகள் ஆகியவற்றின் பற்றாக்குறையால்,  பொருளாதாரம் தேக்கமடைந்து, கல்வியின்மை அதிகரித்துள்ளது என்றும், தாங்க இயலாத இந்த வறுமையினால் மக்கள் இச்சூழலை விட்டு வெளியேறும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்றும் எடுத்துரைத்தார் கர்தினால் செனாரி.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 September 2024, 12:28