Medjugorje திருத்தல பக்தி முயற்சிகளுக்கு திருத்தந்தை அங்கீகாரம்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
போஸ்னியா ஹெர்ஸகோவினாவில் உள்ள Medjugorje மரியன்னை திருத்தலத்தில் இடம்பெறும் பக்தி வழிபாட்டுமுறைகளுக்கு திருத்தந்தையின் ஒப்புதலுடன் அங்கீகாரம் வழங்கியுள்ளது விசுவாசக் கோட்பாடுகளுக்கான திருப்பீடத்துறை.
அமைதியின் அரசி மரியன்னை திருத்தலத்தில் தொடர்ந்து இடம்பெற்றுவரும் பக்தி முயற்சிகளுக்கு ஒப்புதல் வழங்கியுள்ள திருப்பீடம், அத்திருத்தலத்தில் அன்னை மரியா காட்சியளித்தது குறித்த தன் கருத்துக்கள் எதையும் வெளியிடவில்லை.
விசுவாசக் கோட்பாடுகளுக்கான திருப்பீடத் துறையின் தலைவர் கர்தினால் விக்டர் மானுவேல் ஃபெர்னாண்டஸ், அத்துறைச் செயலர் பேரருள்திரு அர்மாந்தோ மத்தேயோ ஆகியோர் கையெழுத்திட்டு வெளியிட்டுள்ள அறிக்கையில், மெஜுகோரே மரியன்னை திருத்தலத்துடன் தொடர்புடைய ஆன்மீகக் கனிகளைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளதுடன், இத்திருத்தல பக்தி முயற்சிகளின் நேர்மறைக் கனிகள் தொடர்ந்து இடம்பெற திருத்தந்தை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கிறது.
அன்னை மரியாவை காட்சியில் கண்டவர்களின் ஒழுக்கரீதி வாழ்வு குறித்து எவ்வித தீர்ப்புக்களையும் தெரிவிக்க விரும்பாத இவ்வறிக்கை, இத்திருத்தலத்தின் ஆன்மீக கனிகள் குறித்தே பேச விரும்புவதாக தெரிவித்துள்ளதுடன், திருஅவையின் பாரம்பரியங்களுக்கு இயைந்தவகையில் இத்திருத்தலத்தோடு தொடர்புடைய விசுவாச வாழ்வு நடவடிக்கைகள் மிக நலமுடையதாகவும், மக்களின் மனமாற்றத்திற்கு வழிவகுப்பதாகவும் உள்ளன என்பது குறித்த மகிழ்ச்சியையும் வெளியிட்டுள்ளது. தம்பதியரிடையே ஒப்புரவிற்கும், திருமண மற்றும் குடும்ப வழ்வின் புதுப்பித்தலுக்கும் இத்திருத்தல பக்தி முயற்சிகள் உதவி வருவதைக் காணமுடிகிறது எனவும் தெரிவிக்கிறது இவ்வறிக்கை.
இத்திருத்தலத்தில் எண்ணற்ற குணப்படுத்தல்கள் இடம்பெற்றுள்ளதையும், ஹெர்ஸகோவினாவின் இச்சிறுநகரம், செபத்தின், கருத்தரங்குகளின், ஆன்மீக தியானங்களின், இளையோர் கூட்டங்களின் முக்கிய வழிபாட்டுதலமாக மாறியுள்ளது குறித்தும், பிறரன்பு நடவடிக்கைகளின் மையமாக மாறியுள்ளது குறித்தும், ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் வந்துகூடும் இடமாக மாறியுள்ளது குறித்தும் விசுவாசக் கோட்பாடுகளுக்கான திருப்பீடத் துறையின் அறிக்கை மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்