உலக ஆயர் மாமன்றக் கூட்டத்திற்கு முன் பாவப்பரிகாரச் சடங்கு
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
வத்திக்கானில் அக்டோபர் மாதம் இடம்பெறவுள்ள உலக ஆயர் மாமன்றக் கூட்டத்திற்கு தயாரிப்பாக அக்டோபர் முதல் தேதியன்று மாலையில் பாவப்பரிகார சடங்குமுறை இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்றிணைந்து நடைபோடும் திருஅவை தொடர்ந்து ஒப்புரவை கைக்கொண்டிருப்பது அவசியம் என்பதை வலியுறுத்தும் உலக ஆயர் மாமன்ற அறிக்கை, திருஅவையின் அடிப்படையான நிறைவாக்கம் மன்னிப்பை உள்ளடக்கியது என்பதையும் வலியுறுத்திக் கூறியுள்ளது.
செப்டம்பர் 30 மற்றும் அக்டோபர் முதல் தேதியில் ஆயர் மாமன்ற பங்கேற்பாளர்களுக்கு என இடம்பெறும் ஆன்மீக தியானத்தின் இறுதியில் நடத்தப்படும் இந்த பாவப்பரிகார சடங்குமுறை, திருஅவையின் புதிய வகை துவக்கத்தைக் குறிப்பதாக இருக்கும் என ஆயர் மாமன்றத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தூய பேதுரு பெருங்கோவிலில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமையில் இடம்பெறும் இந்த பாவப்பரிகார சடங்குமுறையில் மூன்று பேரின் வாழ்வு அனுபவ சாட்சியங்கள் எடுத்துரைக்கப்படும், அதாவது, உரிமை மீறல் பாவம், போர் பாவம், பாராமுகம் என்னும் பாவம் என்பவைகளால் பாதிக்கப்பட்டோரின் சான்றுகள் அவர்களாலேயே எடுத்துரைக்கப்படும்.
இதையடுத்து பல்வேறு பாவங்கள் குறித்த அறிக்கை வெளியிடப்படுவது, மற்றவர்களின் பாவங்களை கண்டிப்பதற்கல்ல, மாறாக ஒவ்வொருவரும் தங்கள் செயலாலும், தாங்கள் செய்யத் தவறியதாலும் மற்றவர்களின் துயர்களுக்கு காரணமாக இருந்ததைக் குறித்து ஆன்மீக சோதனைச் செய்வதற்கே எனவும் தெரிவிக்கிறது ஆயர் மாமன்ற அறிக்கை.
அமைதிக்கு எதிராக, படைப்புக்கும் பழங்குடியினருக்கும் புலம் பெயர்த்தோருக்கும் எதிராக, உரிமைகளுக்கு எதிராக, பெண்களுக்கும் குடும்பத்திற்கும் இளையோருக்கும் எதிராக, கொள்கைகளையும் கோட்பாடுகளையும் மற்றவர்கள் மீது எறியும் கற்களாக பயன்படுத்தியதற்காக, ஏழ்மைக்கு எதிராக, செவிமடுக்கவும், ஒன்றிணையவும், பங்கேற்கவும் ஒன்றிணைந்து நடைபோடுதலுக்கு எதிராக என இத்தகைய அனைத்துவிதமான பாவங்களும் அறிக்கையிடப்பட்டு, மக்கள் அனைவரின் சார்பில் திருத்தந்தை இறைவனை நோக்கி மன்னிப்பை வேண்டுவதாகவும் இடம்பெறும்.
உலக ஆயர் மாமன்றச் செயலகம், உரோம் ஆயர் மன்றம், உலக துறவு சபைகளின் அதிபர்கள் அவை ஆகியவைகளின் உதவியோடு தயாரிக்கப்பட்டுள்ள இந்த பாவப்பரிகார சடங்குக் கொண்டாட்டம், அனைவரும் பங்கேற்கும் வகையில் ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்