அமைதி மற்றும் ஒன்றிப்பின் செய்தியை எடுத்து செல்லும் திருத்தந்தை
ஜெர்சிலின் டிக்ரோஸ்
செப்டம்பர் மாதம் 26 முதல் 29 வரை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், லக்ஸம்பர்க் மற்றும் பெல்ஜியம் நாடுகளுக்கான தன் 46வது திருத்தூதுப் பயணத்தை துவக்கத் தயாராக உள்ளார் என திருப்பீட தகவல் தொடர்புத்துறை இயக்குனர் மத்தெயோ புரூனி அவர்கள் தெரிவித்தார்.
இத்திருப்பயணத்தின்போது அமைதி, புலம்பெயர்வு, காலநிலை மாற்றம், இளையோரின் எதிர்காலம் உள்ளிட்ட பல்வேறு கருப்பொருள்களில் உரையாற்றுவதுடன், திருத்தந்தை அவர்கள் திருஅவை சந்திக்கும் பிரச்சனைகளிலும் கவனம் செலுத்துவார் என்றும் கூறினார் அவர்.
1425ஆம் ஆண்டு நிறுவப்பட்ட Louvain கத்தோலிக்க பல்கலைக்கழகத்தின் 600வது ஆண்டு நிறைவை முன்னிட்டும் இந்த திருத்தூது பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார் மத்தெயோ புரூனி.
மேலும் 1985ஆம் ஆண்டு, லக்ஸம்பர்க் மற்றும் பெல்ஜியம் நாடுகளில் திருப்பயணம் மேற்கொண்ட திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்களின் அடியொற்றி Louvain பல்கலைக்கழக மாணவர்களுடனான சந்திப்புகளும் இடம்பெறும்.
மேலும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பல்கலைக்கழகத்தின் மாணவர்களையும், கல்வியாளர்களையும் சந்திப்பதுடன், 14 ஆண்டுகளாக பெல்ஜியத்தின் துறவுமடத்தை வழிநடத்திய வணக்கத்திற்குரிய Anna de Jesus அவர்களுக்கு அருளாளர் பட்டம் வழங்கும் நிகழ்வும் இடம்பெறும் என்றும் கூறினார் புரூனி.
குறிப்பாக லக்சம்பர்க் மற்றும் பெல்ஜியம் தலைநகர்களுக்கு திருத்தந்தை தனது அமைதி மற்றும் ஒன்றிப்பின் செய்தியை எடுத்துச் செல்வார் எனவும், நாடுகளிடையேயான தொடர்ச்சியான மோதல்களால் பாதிக்கப்பட்டவர்கள் எதிர்காலத்தில் தாங்கள் விரும்பும் உலகை உருவாக்கும் எண்ணங்களை வரவேற்கும் பொருட்டு திருத்தந்தை பிரான்சிஸ், அவர்களுடன் உடனிருப்பார் என்றும் திருப்பீட தகவல் தொடர்புத்துறை இயக்குனர் கூறினார்.
மேலும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கவிருக்கும் ஏழு உரைகளின் முக்கிய கருப்பொருள்களில் ஒன்றாக அமைதி இருக்கும், இவை அனைத்தும் இத்தாலிய மொழியில் வழங்கப்படும் என்றும் கூறியதோடு அந்நாட்டின் சுற்றுச்சூழல் பிரச்சனைகளைப் பற்றியும் பேசுவார் என்றும் புரூனி கூறினார்.
செப்டம்பர் 27 மற்றும் 28 ஆகிய இரண்டு நாட்களின் இரண்டு சந்திப்புகளில் "ஐரோப்பிய கலாச்சாரத்திற்கு இன்னும் கிறிஸ்தவம் என்ன சொல்ல வேண்டும்" என்பது பற்றிய சிந்தனைகளை திருத்தந்தை அவர்கள் வழங்குவதற்கான வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார் திருப்பீடப் பேச்சாளர்.
இளையோர், அருட்பணியாளர்கள், துறவிகள் ஆகியோருடன் பல சந்திப்புகள் இருக்கும் என்று தெரிவித்ததோடு, இப்பயணத்தில் ஆயர்களுக்கான திருப்பீடத்துறையின் தலைவர், புனிதர் பட்ட படிநிலைகளுக்கான திருப்பீடத்துறையின் தலைவர் ஆகியோரும் திருத்தந்தையுடன் செல்வர் எனவும் புரூனி அவர்கள் மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்