கடவுளை எப்படி பின்பற்றுவது என்பதை எடுத்துரைக்கும் திருப்பயணங்கள்
மெரினா ராஜ் – வத்திக்கான்
அன்னை மரியாவின் ஆலயம் நோக்கிய திருப்பயணங்கள் மக்களின் ஆர்வத்தையும் இரசனையையும் உள்ளடக்கிய பயணங்கள் என்றும், கடவுளை எப்படி பின்பற்றுவது என்பது குறித்து குழந்தைகள், இளையோர், முதியோர் என அனைவருக்கும் சான்று பகரக்கூடியது என்றும் குறிப்பிட்டுள்ளார் கர்தினால் மத்தேயோ சூப்பி.
இத்தாலியில் நடைபெற இருக்கும் பொம்பே மற்றும் லொரேத்தோ திருத்தலத்திற்கு குடும்பமாக மக்கள் திருயாத்திரை மேற்கொள்ளும் 17ஆவது தேசிய திருப்பயணம் குறித்து தனது கருத்துக்களை வத்திக்கான் செய்திகளுக்கு இவ்வாறு தெரிவித்துள்ளார் போலோஞ்னா உயர்மறைமாவட்டத்தின் பேராயரும், இத்தாலிய ஆயர் பேரவையின் தலைவருமான கர்தினால் மத்தேயு சூப்பி.
“அவர் உங்களுக்கு சொல்வதெல்லாம் செய்யுங்கள்” என்று இந்த ஆண்டிற்காக எடுக்கப்பட்டிருக்கும் கருப்பொருளானது கானாவூரில் இயேசு தண்ணீரை திராட்சை இரசமாக மாற்றிய நிகழ்வின்போது சீடர்களுக்கு அன்னை மரியா கூறிய வார்த்தைகள் என்று எடுத்துரைத்த கர்தினால் சூப்பி அவர்கள், நமது அன்றாட வாழ்வில் நாம் செய்யவேண்டிய எளிய, அடக்கமான, நம்பிக்கை நிறைந்த வழி இது என்றும் எடுத்துரைத்தார்.
நம் அன்றாட வாழ்வில் நமது பங்கைச் செய்ய, சிறிய வழியில் முன்னேற வேண்டும் என்றும், மகிழ்வையும் நம்பிக்கையையும் கற்றுக்கொள்வதற்கு அன்னை மரியாவை விட சிறந்த ஆசிரியை வேறு யாரும் இல்லை என்றும் எடுத்துரைத்தார் கர்தினால் ஷூப்பி.
நமது உழைப்பு அனைத்தையும் நல்ல திராட்ச இரசமாக மாற்ற இறைவன் அனுமதிக்க வேண்டும் என்று சுட்டிக்காட்டிய கர்தினால் சூப்பி அவர்கள், போர் மற்றும் வன்முறையால் நாம் வாழ்கின்ற இவ்வுலகம் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில், உயிர்த்த இயேசு கிறிஸ்துவின் உயிருள்ள, நிலையான வாழும் அமைதியானது நம் ஒவ்வொருவரிலும், இவ்வுலகம் முழுவதிலும், நிலைக்க செபிக்கவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
அமைதியால் நமது உறவுகளை நிரப்புவதன் வழியாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வலியுறுத்துவது போல நாம் அனைவரும் அமைதியின் கருவிகளாகவும் அதனை உருவாக்குபவர்களாகவும் செயல்படுவோம் என்று எடுத்துரைத்தார் கர்தினால் மத்தேயோ சூப்பி.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்