தேடுதல்

பேராயர் Gabriele Giordano Caccia பேராயர் Gabriele Giordano Caccia 

பழங்குடி இன மக்களுக்காக ஐ.நா.வில் திருப்பீடத்தின் குரல்

ஐ.நா.வில் பேராயர் காச்சா: பழங்குடி சமூகங்கள் ஒரு தனித்துவமான கலாச்சார பாரம்பரியத்தை அனுபவிப்பதை அங்கீகரித்து, அவர்களின் மரியாதையை நிலைநாட்ட வேண்டும்

ஜெர்சிலின் டிக்ரோஸ் - வத்திக்கான்

பழங்குடி  மக்கள் பல்வேறு சவால்களை எதிர்கொள்கின்றனர் என்றும், காலநிலை மாற்றம்,  வேளாண் தொழில் துறை,  நகரமயமாக்கல் ஆகியவற்றால்   தங்கள் நிலங்களை  இழக்கும் ஆபத்தான நிலையில் உள்ளனர் என்றும்   ஐ.நா.விற்கான திருப்பீடத்தின் நிரந்தர பார்வையாளர் பேராயர் Gabriele Caccia  அவர்கள் தெரிவித்துள்ளார்.

உணவுப் பாதுகாப்பின்மை மற்றும் அணுசக்தி சோதனைகளின் விளைவுகள் உட்பட பழங்குடி சமூகங்கள் எதிர்கொள்ளும்  பல சவால்கள், அவர்களுக்குரிய மதிப்பு வழங்கப்படாததால் எழுகின்றன என்று கூறியதுடன், திருத்தந்தை பிரான்சிஸ்  அவர்கள் பழங்குடியினரின் இத்தகைய நிலையை வன்முறையின் வடிவம் என்று  அழைத்து, இந்நிலை  அவசரமாக கவனிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியதையும் நினைவு கூர்ந்தார் பேராயர்  காச்சா.

பழங்குடி சமூகங்கள் ஒரு தனித்துவமான கலாச்சார பாரம்பரியத்தை அனுபவிப்பதை அங்கீகரித்து,  அவர்களின்  மரியாதையை நிலைநாட்ட வேண்டும் என்று கூறிய பேராயர் காச்சா அவர்கள், பழங்குடி மக்கள் தங்கள்  கலாச்சாரத்தை பராமரிக்கவும்,  பாதுகாக்கவும், மேம்படுத்தவும் அவர்களுக்கு உரிமை உண்டு என்றும் எடுத்துரைத்தார்.

பழங்குடி மக்கள் வனசுற்றுச்சூழல் மற்றும் பல்லுயிர் பெருக்கத்தைப் பாதுகாத்தல், தீவிர மலைப்பகுதிகளில் விவசாய விளைச்சலை மேம்படுத்துதல் மற்றும் பாரம்பரிய மொழிகளைப் பரப்புதல் உள்ளிட்ட பல துறைகளில் வளமையான அனுபவங்களைக் கொண்டுள்ளனர் எனவும் கூறினார் அவர்.

உலகில் உள்ள 7,000 மொழிகளில் 4,000 க்கும் மேற்பட்ட மொழிகள் பழங்குடி சமூகங்களால் பேசப்படுகின்றன என்றும்,  இந்த பாரம்பரிய அறிவைப் பாதுகாப்பதும் ஊக்குவிப்பதும் முக்கியம் என்றும் தெரிவித்தார் பேராயர்.

மேலும்,  பல நூற்றாண்டுகளாக பாரம்பரியம், சுற்றுச்சூழல் பொறுப்புணர்வு, இயற்கையின் மீதான மரியாதை ஆகியவற்றில் வேரூன்றிய பழங்குடி மக்களின் சுற்றுச்சூழல் மேலாண்மை நடைமுறைகள் முறையாக அங்கீகரிக்கப்பட்டு உலகளாவிய காலநிலை மற்றும் பல்லுயிர் உத்திகளில் ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார் பேராயர்.

பழங்குடி இளையோர், தலைமுறைகளுக்கு இடையிலான பாலங்கள்,  இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பாதுகாப்பதற்கான முக்கியமான பாதுகாவலர்கள் என்றும், பாரம்பரியத்தையும், சுற்றுச்சூழலையும் பாதுகாப்பதற்கான அவர்களின் அர்ப்பணிப்புக்கு அரசுகள் மற்றும்  உலகளாவிய சமூகத்தின் முழுமையான மற்றும் தொடர்ச்சியான ஆதரவு தேவைப்படுகிறது என்றும் எடுத்துரைத்தார் பேராயர் காச்சா.

பழங்குடி சமூகங்கள் மற்றும் அவர்களின் கலாச்சார மரபுகளுக்கு சிறப்பு அக்கறை காட்டுவது அவசியம் என்றும், அவர்களைப் பொறுத்தவரை, நிலம் என்பது ஒரு பொருள் அல்ல, மாறாக கடவுளிடமிருந்து வந்த கொடை என்றும், அவர்கள் தங்கள் பாரம்பரியத்தையும், அடையாளத்தையும் பாதுகாக்கும் புனிதமான இடமே அது என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ள வார்த்தைகளையும் நினைவு கூர்ந்தார் பேராயர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 October 2024, 17:10