தேடுதல்

பேராயர்  கபிரியேலே காச்சா பேராயர் கபிரியேலே காச்சா 

தற்போது அணுஆயுத மோதல் குறித்த அச்சம் அதிகம் உள்ளது

பேராயர் காச்சா : அச்சுறுத்திக் கட்டுப்படுத்துவதன் வழியாகவே அமைதியைப் பெறமுடியும் என்ற தப்பெண்ணம் இவ்வுலகிலிருந்து அகற்றப்பட வேண்டும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

கட்டுப்படுத்தப்படாத ஆயுதப் போட்டிகள் இடம்பெற்றுவரும் இன்றையக் காலக்கட்டத்தில் எக்காலத்தையும் விட தற்போது அணுஆயுத மோதல் குறித்த அச்சம் அதிகமதிகமாக இருப்பதாக ஐ.நா. கூட்டத்தில் ஆழ்ந்த கவலையை வெளியிட்டார் திருப்பீடப் பிரதிநிதி பேராயர் கபிரியேலே காச்சா.

தற்போதைய உலக பதட்ட நிலைகள் அணு ஆயுதங்களை திட்டமிட்டும், தவறுதலாகவும் பயன்படுத்தும் பேராபத்து உள்ளதாகவும், அத்தகைய ஒரு நிலை ஏற்பட்டால் அது இயற்கைக்கும் மனிதகுலத்திற்கும் பேரழிவைக் கொண்டுவரும் எனவும் கூறினார் ஐ.நா.விற்கான திருப்பீட பிரதிநிதி பேராயர் காச்சா.  

ஆயுதக் கட்டுப்பாடு, ஆயுதங்களை ஒழித்தலும் வெளிப்பாட்டுத்தன்மையும் போன்றவை குறித்த பல ஒப்பந்தங்கள் ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ள போதிலும், அவைகளை மறந்து இன்றைய உலகம் பிரிவினைகளை நோக்கிச் செல்கிறது என்ற கவலையை வெளியிட்ட பேராயர், அச்சுறுத்திக் கட்டுப்படுத்துவதன் வழியாகவே அமைதியைப் பெறமுடியும் என்ற தப்பெண்ணம் அகற்றப்பட வேண்டும் என்ற விண்ணப்பத்தையும் விடுத்தார்.

அழிவு மற்றும் முற்றிலுமான ஒழிப்பு குறித்த அச்சத்தை முன்னிறுத்தி அமைதியையும் அனைத்துலக நிலையானதன்மையையும் கட்டியெழுப்பமுடியாது எனவும் கூறினார் பேராயர் காச்சா.

அணுஆயுதங்களை உற்பத்திச் செய்வது என்பது, ஒழுக்க ரீதி கோட்பாடுகளுக்கு எதிரானது மட்டுமல்ல, உலகின் உண்மையான பாதுகாப்புக்குத் தேவையான வளங்களை அணுஆயுதத் தயாரிப்பில் செலவிட்டு வீணாக்கும் குற்றத்தையும் குறிக்கிறது என்றார் ஐ.நா.விற்கான திருப்பீடப் பிரதிநிதி.

அணுஆயுத அச்சத்திலிருந்து உலகம் விடுபடவேண்டுமானால் அணுஆயுதம் இவ்வுலகிலிருந்து முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும் என்ற அழைப்பையும் ஐ.நா. கூட்டத்தில் விடுத்தார் பேராயர் காச்சா.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 October 2024, 15:26