மனித குலத்திற்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் முயற்சிகள்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
மரபு வழக்கமாக மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் அனைத்தும் பன்னாட்டு அளவிலான குற்றங்கள் என ஏற்றுக்கொள்ளப்பட்டுவரும் நிலை என்பது, இத்தகையக் குற்றங்களைத் தடுப்பதற்கும் தண்டிப்பதற்கும் ஏதுவான அனைத்துலக ஒத்துழைப்புக்கு நிச்சயம் பலம் சேர்க்கிறது என ஐ.நா. கூட்டத்தில் உரையாற்றினார் பேராயர் கபிரேயேலே காச்சா.
மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் குறித்த ஐ.நா. கருத்தரங்கில் திருப்பீடத்தின் சார்பில் உரையாற்றிய பேராயர் காச்சா அவர்கள், பன்னாட்டு சட்டங்களில் பாலின வேறுபாடுகளுக்கு இயைந்தவகையில் குற்றங்கள் மற்றும் தண்டனைகள் குறித்த விவரங்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியதுடன், இத்தகைய வேறுபாடுகளுடன் குற்றங்கள் அணுகப்படவில்லையெனில் கற்பழிப்புகள், பாலியல் ரீதியான அடிமைமுறை, கட்டாயப்படுத்தப்பட்ட பரத்தமை போன்றவைகளை தடுப்பதற்கான முயற்சிகள வெற்றியடைவது சிரமம் என்றார்.
மனித குலத்திற்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதற்கான அனைத்து முயற்சிகளும் ஒவ்வொரு நாட்டின் கொள்கைகளோடு இயைந்ததாகவும், ஒவ்வொரு நாட்டின் சுயாட்சிக்கு எதிராகச் செல்லாததாகவும் இருக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார் பேராயர் காச்சா.
தங்கள் எல்லைக்குள் நடக்கும் மனிதகுல விரோத குற்றங்களைத் தடுப்பதோடு, அவைகளை தடுக்கும் நடவடிக்கைகளில் அண்மை நாடுகளுக்கு உதவ வேண்டிய கடமையையும் ஐ.நா. கூட்டத்தில் வலியுறுத்தினார் திருப்பீடப் பிரதிநிதி.
மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களை தடுப்பதில் நாடுகள் ஒவ்வொன்றும் ஒருவருக்கொருவர் உதவுவது, குற்றங்களை தடுக்க மட்டுமல்ல, நாடுகளுக்கிடையேயான நல்லுறவுக்கும் உதவும் என மேலும் உரைத்தார் பேராயர்.
மரணதண்டனைகள் குறித்தும் திருப்பீடத்தின் கருத்துக்களை ஐ.நா. கூட்டத்தில் பகிர்ந்து கொண்டார் பேராயர் காச்சா.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்