திருத்தந்தையின் உலக அமைதிக்கான செப நாள்
ஜெர்சிலின் டிக்ரோஸ் - வத்திக்கான்
போர்ச்சூழல் மிகுந்த இவ்வுலகின் நிலை, ஆயர் மாமன்ற பொதுப்பேரவையின் பங்கேற்பாளர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து வருபவர்களின் இதயங்களிலும், மனதிலும் பெரிதும் சுமையாக உள்ளது என்று அக்டோபர் 3, வியாழனன்று, ஆயர் மாமன்ற 16வது பொதுப்பேரவையின் இரண்டாம் அமர்வின் தொடக்கத்தில் செய்தியாளர் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் அமைதி, மன்னிப்பு, பெண்களின் பங்கு, ஆய்வுக் குழுக்களின் பணி முறைகள் ஆகியவற்றின் முக்கிய கருப்பொருள்களை ஆயர் மாமன்ற 16வது பொதுப்பேரவையின் சிறப்புச் செயலர்கள் இயேசு சபை அருள்பணி Giacomo Costa, மற்றும் பேரருள்திரு Riccardo Battocchio, ஆயர் மாமன்ற பிரதிநிதிகள் தலைவர் அருள்சகோதரி Maria de los Dolores Palencia Gómez மற்றும் ஆயர் Daniel Ernest Flores அவர்களும், திருப்பீட சமூகத்தொடர்புத் துறையின் தலைவர் Paolo Ruffini அவர்களும் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.
ஆயர் மாமன்றம் என்பது ஒரு நாடாளுமன்றம் அல்ல, அது செவிமடுப்பதற்கும், ஒன்றிப்பதற்குமான ஓர் இடம் என்னும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வார்த்தைகளை மேற்கோள் காட்டி, ஆயர் மாமன்றம் என்பது திறன் வாய்ந்த வாய்மொழி அறிக்கை அல்ல, இது ஒரு நேரடி அனுபவம் என்று வலியுறுத்திய ஆயர் மாமன்ற பொதுப்பேரவையின் செயலர் அருள்பணி Costa அவர்கள், அங்கு நிலவும் மகிழ்ச்சியான சூழலையும் குறிப்பிட்டார்.
மேலும், மாமன்றத்தில் விவாதிக்கும் குழுக்கள், மூடப்பட்ட குழுக்கள் அல்ல, திரு அவை ஒன்றிணைந்து செயல்பட கற்றுக்கொள்ளும் இடங்கள் என்றும் குறிப்பிட்டார் அருள்பணி Costa.
திருத்தந்தையின் தலைமையில் நடைபெற்ற பாவப் பரிகார வழிபாட்டை நினைவு கூர்ந்து, திருஅவை என்றால் என்ன என்பதற்கான முன்மாதிரியான உணர்வை அவ்வழிபாடு வழங்கியது என்றும், கடவுளின் இரக்கத்தைப் பெற்ற திருஅவையாக நாம் இருக்கிறோம் என்றும் வலியுறுத்தினார் ஆயர் மாமன்ற பிரதிநிதித்துவ தலைவர் பேரருள்திரு Battocchio.
நாம் காணும் உலகின் எதார்த்தங்களை, தந்தையாம் கடவுளின் பார்வையால் கண்டுணர வேண்டும்மென்றும், இதன் வழியாகவே ஒருங்கிணைந்த திருஅவை மற்றும் மறைப்பணியின் உண்மையான அனுபவத்தைப் பெறமுடியும் என்று ஆயர் மாமன்ற பிரதிநிதித்துவ தலைவர் அருள்சகோதரி Palencia Gómez கூறினார்.
மேலும், திருஅவையில் பெண்களின் பங்கு முன்னேற்றம் அடைந்துள்ளது என்றும், பெண்கள் ஆற்றும் பணிகள் அங்கீகரிக்கப்படுகின்றன என்றும் அருள்சகோதரி எடுத்துரைத்தார்.
மௌனத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய ஆயர் புளோரஸ் அவர்கள், மௌனம் என்பது ஒரு வெற்றிடம் அல்ல, மாறாக அர்த்தங்கள் நிறைந்த வார்த்தைகள் வெளிப்படுகின்ற இடம் என்று கூறி, உலகத்தைப் பற்றிய ஆழமான ஆன்மீக புரிதலைப் பெற இந்த மௌனம் உதவும் என்றும் பரிந்துரைத்தார்.
அக்டோபர் 6 மற்றும் 7ஆம் தேதிகளில் திட்டமிடப்பட்டுள்ள திருத்தந்தையின் உலக அமைதிக்கான முயற்சிகளான மேரி மேஜர் பெருங்கோவிலில் ஜெபமாலை ஜெபிப்பது, இறைவேண்டல், நோன்பு ஆகிய நினைவூட்டலுடன் செய்தியாளர் சந்திப்பு நிறைவு பெற்றது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்