தேடுதல்

லெபனோனில் தாக்குதல் லெபனோனில் தாக்குதல்  (AFP or licensors)

லெபனோன் நாட்டின் நெருக்கடியை நிவர்த்தி செய்ய அழைப்பு

லெபனோனில் பலதரப்பட்ட மதங்களை பின்பற்றும் மக்கள் இணக்கமான ஒரு வாழ்வை வாழ்ந்து வருகின்றனர். அவர்களில் ஏறக்குறைய மூன்றில் ஒரு பகுதியினர் கிறிஸ்தவர்கள்

ஜெர்சிலின் டிக்ரோஸ் - வத்திக்கான்

லெபனோனின் சுதந்திரம், ஒருமைப்பாடு ஆகியவற்றை பாதுகாக்குமாறு பன்னாட்டு  சமூகத்திற்கு அழைப்பு விடுத்தார் திருப்பீடத்தின் வெளியுறவுத் துறைச்  துணைச் செயலர் அருள்பணி Mirosław Stanisław Wachowski.

லெபனோனுக்கு ஆதரவாக  அக்டோபர்  24, வியாழனன்று  பிரான்ஸ் அரசு ஏற்பாடு செய்திருந்த மாநாட்டில் கலந்துகொண்ட அருள்பணி Wachowski  அவர்கள், லெபனோன் கடுமையான பொருளாதார நெருக்கடியில்   உள்ளது என்று  அம்மக்களின் துன்பங்களை  பகிர்ந்து கொண்டார்.

உடனடி போர் நிறுத்தத்திற்கு அழுத்தம் கொடுப்பதன் வழியாக பன்னாட்டு  சமூகம் கட்டாயம் லெபனோன்  நாட்டின் நெருக்கடியை நிவர்த்தி செய்ய வேண்டும் என்றும்  கூறினார் திருப்பீடத்தின் வெளியுறவுத் துறை  துணைச் செயலர்.

லெபனோனில் பலதரப்பட்ட மதங்களை பின்பற்றும் மக்கள்   இணக்கமான ஒரு வாழ்வை வாழ்ந்து வருகின்றனர் என்று கூறிய அருள்பணி Wachowski  அவர்கள், அவர்களில்  ஏறக்குறைய மூன்றில் ஒரு பகுதியினர் கிறிஸ்தவர்கள் என்றும் கூறினார்.

அரசியல் காரணங்களால் லெபனோன்  நாட்டில் ஏறக்குறைய 2 ஆண்டுகளாக குடியரசுத் தலைவர் இல்லை என்றும், இந்நிலைக் குறித்து திருப்பீடம் கவலை கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார் அவர்.

ஒரு குடியரசுத் தலைவரை  நியமித்தல் என்பது வெறுமனே ஒரு விருப்பத்தேர்வு அல்ல, லெபனோனின் சுதந்திரம், ஒருமைப்பாடு ஆகியவற்றைப் பாதுகாப்பதற்கான ஒரு தேவை  என்றும் வலியுறுத்தினார் திருப்பீடத்தின் வெளியுறவுத் துறை  துணைச் செயலர்.  

மருத்துவமனைகள், மருந்தகங்கள், பள்ளிகள், கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள் ஆகியவற்றின் பாதுகாப்பு உட்பட, அனைத்துலக மனிதாபிமானச் சட்டங்களுக்கு  உயர்ந்த மரியாதை வழங்க திருப்பீடம் அழைப்பு விடுக்கிறது என்று கூறினார் அருள்பணி Wachowski.

இஸ்ரேல் இராணுவத்தால் பலமுறை தாக்குதலுக்கு உட்பட்ட, தெற்கு லெபனோனில் பாதுகாப்பு வழங்கிவரும் ஐ.நா. அமைதி காக்கும் படையினருக்கு திருப்பீடம் தனது ஆதரவை அளிப்பதாகவும் தெரிவித்தார் திருப்பீடத்தின் வெளியுறவுத் துறை  துணைச் செயலர். 

லெபனோனையும், மத்திய கிழக்கு நாடுகளையும்  வெளிநாடுகளின் நலன்களுக்காகவும், சுய இலாபங்களுக்காகவும் இனியும் பயன்படுத்த வேண்டாம் என்றும்,  லெபனோனியர்கள் தங்கள் சொந்த மண்ணில், தேவையற்ற தலையீடுகள்  இல்லாமல் ஒரு சிறந்த எதிர்காலத்தின் நாயகர்களாக விளங்குவதற்கான வாய்ப்புகள்  வழங்கப்பட வேண்டும் என்றும் திருத்தந்தை  பிரான்சிஸ் அவர்களின் வார்த்தைகளை நினைவு கூர்ந்தார் அருள்பணி Wachowski.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 October 2024, 17:02