தேடுதல்

விவசாயத்தில் நீரின் பயன்பாடு விவசாயத்தில் நீரின் பயன்பாடு  (ANSA)

வாழ்வுக்கு தேவையான நீரைப் பெறுவது அடிப்படை உரிமை

குடிநீர் ஆதாரங்களை நிர்வகித்தல், பயன்பாட்டை மேம்படுத்துதல், உற்பத்தியை பெருக்குதல், மாசுக்கேடடையாமல் பாதுகாத்தல், வீணாக்குதலைக் குறைத்தல் போன்றவை இன்றியமையாதவை.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

நீர் நிர்வாகத்துறையில் ஐரோப்பிய நாடுகள் எடுத்துவரும் முயற்சிகளை திருப்பீடம் பாராட்டுவதாக OSCE எனப்படும் ஐரோப்பாவின் பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பு அவையின் கூட்டத்தில் உரையாற்றினார் திருப்பீடப் பிரதிநிதி பேரருள்திரு RICHARD GYHRA.

ஆஸ்திரியாவின் வியன்னாவில் உள்ள ஐ.நா. அலுவலகங்கள் மற்றும் முக்கிய பன்னாட்டு அமைப்புகளுக்கான திருப்பீடப் பிரதிநிதியாகச் செயலாற்றும் பேரருள்திரு சீரா அவர்கள், நீர் நிர்வாகம் குறித்து உரையாற்றும்போது, நீர் என்பது மனித நலத்திற்கும், விவசாயத்திற்கும், பொருள் உற்பத்திக்கும் இன்றியமையாதது எனவும், மிகவும் அரிதான மற்றும் வாழ்வுக்கு அத்தியாவசிய தேவையான இதைப் பெறுவது மனிதனின் அடிப்படை உரிமை  எனவும் திருத்தந்தை கூறியுள்ளதை மேற்கோள் காட்டினார்.

நீர் நிர்வாகத்தைப் பொறுத்தவரையில் எடுக்கப்பட்ட தீர்வுகளை நடைமுறைப்படுத்துவதில் அரசியல் விருப்பார்வம் குறைவுபடுகிறது என்பதை சுட்டிக்காட்டிய பேரருள்திரு சீரா அவர்கள், அனைவருக்கும் பாதுகாப்பான சுத்தக் குடிநீர், பாதுகாப்பான உணவு, நல ஆதரவுப் பணிகள் என்பவை மனிதனின் வாழ்வதற்கான உரிமையோடு நெருங்கிய தொடர்புடையவை என்பதையும் எடுத்தியம்பினார்.

பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் நடவடிக்கைகள் வழியாக OSCE அமைப்பு, நீர் நிர்வாகத்திலும் காலநிலை மாற்றத்திற்கு இயைந்தவகையிலும் எடுத்துவரும் நடவடிக்கைகளைப் பாராட்டினார் திருப்பீடப் பிரதிநிதி.

குடிநீர் ஆதாரங்களை நிர்வகிப்பது, அவைகளின் பயன்பாட்டை மேம்படுத்துதல், உற்பத்தியை பெருக்குதல், மாசுக்கேடடையாமல் பாதுகாத்தல் மற்றும் வீணாக்குதலைக் குறைத்தல் போன்றவை குறித்தும் திருப்பீடத்தின் கருத்துக்களை வியன்னா கூட்டத்தில் பகிர்ந்துகொண்டார் பேரருள்திரு சீரா.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 October 2024, 14:42