சிறார் பாதுகாப்பு நடைமுறைகள் குறித்த திருஅவை அறிக்கை
ஜெர்சிலின் டிக்ரோஸ் - வத்திக்கான்
சிறார்களைப் பாதுகாப்பதற்கான திருத்தந்தையின் ஆணையம் நிறுவப்பட்டு பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, ஐந்து கண்டங்களில் விரிவான ஆராய்ச்சிகளை நடத்திய அர்ப்பணிப்பு ஆய்வுக் குழு, திருஅவையின் கொள்கைகள் மற்றும் பாதுகாப்புக்கான நடைமுறைகள் குறித்த ஆண்டு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
திருஅவைக்குள் நடைபெறும் உரிமைமீறல்களைத் தடுக்க, 2014ஆம் ஆண்டு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் உருவாக்கப்பட்ட இந்த ஆணையம், அக்டோபர் 29ஆம் தேதி செவ்வாய்க்கிழமையன்று, குழந்தைகள் பாதுகாப்பு குறித்தவைகளில் அனுபவமிக்க உறுப்பினரான Maud de Boer-Buquicchio அவர்களின் தலைமையில் ஆய்வுகளை நடத்தி ஏறக்குறைய 50 பக்கங்கள் மற்றும் 4 பிரிவுகள் கொண்ட ஆவணம் ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஐந்து கண்டங்கள் முழுவதிலுமிருந்தும், பல்வேறு மத நிறுவனங்கள், துறவு இல்லங்கள் மற்றும் திருஅவையின் நிர்வாகத் தலைமையகத்திலிருந்தும் ஏராளமான தரவுகளை சேகரித்து, அதன் நடைமுறைகள் மற்றும் செயல்முறைகள் குறித்து அதிக வெளிப்படைத்தன்மையைத் தொடர அந்த ஆவணம் ஊக்குவிக்கிறது.
ஆவணத்தின் வெளிப்புற முகப்புப் பக்கத்தில், மீளுந்தன்மையை குறிக்கும் சின்னமான பாவோபாப் எனப்படும் பெருக்க மரம் வரையப்பட்டு, பாதிக்கப்பட்டோரின் குரலையும், திருஅவையை பாதுகாப்பான இடமாக உருவாக்குவதற்கான முயற்சியையும், உரிமைமீறல் போன்ற குற்றங்களால் இழந்த நம்பிக்கையை மீண்டும் பெறுவதற்கான செய்முறையையும் வெளிப்படுத்துவதாக முகப்பு பக்கம் உள்ளது.
மேலும், ஆணைக்குழுவின் அறிக்கை முழுவதும் பாதிக்கப்பட்டவர்கள் குணமடைவதை மையமாகக் கொண்டுள்ளது.
குற்றச் செயல்களில் ஈடுபடும் பொறுப்பான பதவிகளில் இருப்பவர்களை பதவி நீக்கம் செய்வதற்கான, அல்லது நீக்குவதற்கான செயல்முறைகளை நெறிப்படுத்தவும் ஆவணம் பரிந்துரைக்கிறது.
மறைமாவட்டங்களுக்கிடையேயான ஒருமைப்பாட்டை அதிகரிப்பது, பாதிக்கப்பட்டவர்களின் உதவிக்கான மையங்களை உருவாக்குவது, அவர்களை பாதுகாப்பதற்கான நேர்மையான கலாச்சாரத்தை வளர்ப்பது அவசியம் என்றும் சிறார்களைப் பாதுகாப்பதற்கான ஆணையம் வலியுறுத்தியுள்ளது.
திருஅவை மற்றும் சமூகத்திற்குள் மனித உரிமைகளை ஊக்குவிப்பதற்கான தனது பணியை முன்னெடுப்பதிலும், பாதுகாப்பு தரங்களை உறுதிப்படுத்துவதிலும் இவ்வாணையம் கவனம் செலுத்துகிறது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்