தேடுதல்

ஆயர் மாமன்றக் கூட்டம் ஆயர் மாமன்றக் கூட்டம்  (ANSA)

காசா பங்குதளத்திற்கு 62,000 யூரோ வழங்கிய உலக ஆயர் மாமன்றம்

இளவயதிலேயே விசுவாச உருவாக்கல்கள் இடம்பெறவேண்டிய தேவை, புதிதாக திருமுழுக்குப் பெற்றோருடன் உடன் நடந்து செல்லல் ஆகியவை ஆயர் மாமன்றத்தில் வலியுறுத்தப்பட்டன.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

போரால் பாதிக்கப்பட்டிருக்கும் காசா பகுதியின் கத்தோலிக்க திருக்குடும்ப பங்குதளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு என ஆயர் மாமன்ற பிரதிநிதிகளிடமிருந்து 62,000 யூரோக்கள் நிதி திரட்டப்பட்டுள்ளது.

காசாவின் ஒரே கத்தோலிக்கப் பங்குதளத்தில் போரால் துன்புறும் மக்களுக்கு உதவுவதற்கென உரோம் நகரின் உலக ஆயர் மாமன்ற பிரதிநிதிகளிடமிருந்து திரட்டப்பட்ட நிதி 62,000 யூரோக்கள் என்பதை பத்திரிகையாளர் சந்திப்பின்போது அறிவித்தார், திருப்பீட சமூகத்தொடர்புத் துறையின் தலைவர், முனைவர் பவுலோ ரூஃபினி.   

ஏற்கனவே இந்த தொகை யெருசலேமில் உள்ள அப்போஸ்தலிக்க தூதரகம் வழி அனுப்பப்பட்டு, திருக்குடும்ப பங்குதள தலைமை அருள்பணி கபிரியேல் ரொமனெல்லி அவர்களை சென்றடைந்துவிட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஆயர் மாமன்றக் கூட்டத்தில் கருத்துப் பரிமாற்றங்களில் கலந்துகொண்ட தலைவர்கள், மதத்தை விட்டு ஒதுங்கி நிற்க முயலும் இன்றைய உலகில் கிறிஸ்தவ துவக்கத்தின் இன்றியமையாத நிலையை உணர்ந்து நாம் செயல்படவேண்டும் எனவும், நற்செய்திக்கு சான்றுகளாக விளங்க இளவயதிலேயே விசுவாச உருவாக்கல்கள் இடம்பெறவேண்டியதன் தேவையும், திருஅவையின் தலைமைத்துவ பணிகளில் பெண்களின் பங்கற்பு, புதிதாக திருமுழுக்குப் பெற்றோருடன் உடன் நடந்து சென்று அவர்களின் விசுவாசம் உறுதிப்பட உழைத்தல் போன்றவைகளை வலியுறுத்தியதாக பத்திரிகையாளர் கூட்டத்தில் விவரிக்கப்பட்டது.   

திருஅவையை பொருளாதார ரீதியாக மாற்றுவதற்கான முயற்சிகளில் நாம் ஈடுபடவில்லை என்பதை அறிந்துள்ளவேளையில், திருஅவையை நம் வாழ்வுக்குள் எடுத்து அதனை வாழும் முறைகளை சிறப்புற மாற்ற விழைகிறோம் என்பது குறித்தும் ஆயர் மாமன்றத்தில் விவாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.  

மக்கள் கவனமுடன் செவிமடுப்பது என்பது, சான்று வாழ்வு வாழ்பவர்களுக்கேயன்றி, போதகர்களுக்கல்ல என்பதும், போதகர்களுக்கு அவர்கள் செவிமடுக்கிறார்கள் என்றால், சான்றாக வாழும் போதகர்களுக்கே என்ற புனித திருத்தந்தை ஆறாம் பவுல் அவர்களின் வார்த்தைகளும் ஆயர் மாமன்றத்தில் எதிரொலித்ததாக எடுத்துரைக்கப்பட்டது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 October 2024, 15:41