இரஷ்ய ஆக்கிரமிப்பால், உக்ரைன் மக்களிடையே பல காயங்கள்
ஜெர்சிலின் டிக்ரோஸ் - வத்திக்கான்
உக்ரைனின் மக்கள் பலர் தங்களின் அன்புக்குரியவர்களை இழந்து முற்றிலும் நம்பிக்கை இழந்த நிலையிலும், கைவிடப்பட்ட நிலையிலும் வாழ்கின்றனர் என்றும், அவர்கள் அவ்வாறு கைவிடப்பட்ட நிலையை உணர வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார் Ternopil-Zborivன் பேராயர் Martyniuk.
உக்ரைனிலிருந்தும், போர் மற்றும் வன்முறைகளால் பாதிக்கப்பட்டுள்ள பிற நாடுகளிலிருந்தும் உலக ஆயர் மாமன்ற பேரவைக்கு வருகை தந்துள்ள பிரதிநிதிகள் தங்கள் பணிகளில் கவனம் செலுத்துவது எளிதல்ல என்றும், அவர்கள் எப்போதும் அடுத்த நொடி எதுவும் நடக்கலாம் என்ற தங்கள் சொந்த நாட்டைப் பற்றிய கவலையோடும் அச்சத்தோடும் இருக்கிறார்கள் என்றும் கூறினார் பேராயர்.
திருஅவை காயப்பட்டவர்களையும், வேதனையுறுபவர்களையும் எப்படி வரவேற்க வேண்டுமென்றும், எவ்வாறு தனது ஒன்றிப்பை வெளிப்படுத்த வேண்டுமென்றும் தெரிந்து வைத்திருக்கிறது என்றும் எடுத்துரைத்தார் அவர்.
உக்ரைன் பிரதிநிதிகள் தங்களின் உரைகளின்போது, உலகின் பல்வேறு பகுதிகளில் நடக்கும் போர்களால் நவீன உலகம் அனுபவித்து வரும் காயங்கள் பற்றி பேசினர் என்றும், இதன் வழியாக உக்ரைன் மக்கள் தனித்து விடப்படவில்லை என்ற உணர்வை தங்களைப் போன்று காயப்பட்டவர்களின் சாட்சிய பகிர்விலிருந்து விளக்கினார் பேராயர்.
போர் நேரத்தில் கடுமையான துயரங்களை அனுபவிக்கும் மக்களுடன் செல்வது உக்ரைனில் உள்ள அனைத்து அருள்பணியாளர்களுக்கும் மிகப்பெரிய சவால் என்றும், உக்ரைனுக்கு எதிரான இரஷ்ய கூட்டமைப்பின் ஆக்கிரமிப்பு, உக்ரைன் மக்களிடையே பல காயங்களை ஏற்படுத்தியுள்ளது எனவும் தெரிவித்தார் பேராயர் Martyniuk.
ஏறத்தாழ 1 கோடியே 40 இலட்சம் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்றும், அவ்வாறு புலம்பெயர்ந்தோரை வரவேற்பது, அவர்களுக்கு ஆன்மீக உதவிகளை வழங்குவது சவாலாக இருந்தது என்றும் கூறினார் பேராயர் Martyniuk.
மேலும், எல்லாவற்றையும் இழந்த குடும்பங்களுடன் செல்வது மற்றொரு கடினமான பணி என தெரிவித்துள்ள பேராயர் Martyniuk அவர்கள், போரின் காயங்களை ஆற்றுதல் என்னும் நோக்கில் நாங்கள் மேற்கொள்ளும் மேய்ப்புப்பணி என்பது, துன்பப்படும் மக்களுக்கு நெருக்கமாக இருப்பது, அவர்களுக்கு மனிதாபிமான உதவிகளை மட்டுமல்ல, எல்லாவற்றிற்கும் மேலாக ஆன்மீக உதவிகளையும் வழங்குவதாகும் என்றும் எடுத்துரைத்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்