உலகில் உடன்பிறந்த உணர்வு இயலக்கூடியதே என்பதன் அடையாளம்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
இவ்வுலகின் பல்வேறு பகுதிகளில் துண்டுதுண்டாக நடத்தப்பட்டுவரும் மூன்றாம் உலகப்போர், பரவலாக விரிந்து வருவதுபோல் தோற்றமளிக்கிறது என திருப்பீடத்தின் கவலையை பன்னாட்டு கூட்டமொன்றில் வெளியிட்டார் திருப்பீடப் பிரதிநிதி, பேராயர் Ettore Balestrero.
சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவிலுள்ள ஐ.நா. அலுவலகங்கள் மற்றும் பன்னாட்டு அமைப்புக்களுக்கான திருப்பீடப் பிரதிநிதி, பேராயர் பலஸ்திரேரோ அவர்கள் செஞ்சிலுவை மற்றும் செம்பிறை சங்கங்களின் பன்னாட்டுக் கூட்டத்தில் உரையாற்றியபோது இவ்வாறு கூறினார்.
போரால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கும் இயற்கைப் பேரிடர்களால் துன்புறும் மக்களுக்கும் மனிதாபிமான பாதுகாப்பையும் உதவிகளையும் வழங்கிவரும் செஞ்சிலுவை மற்றும் செம்பிறைச் சங்கங்களைப் பாராட்டிய பேராயர், இத்தகைய உதவிகள், உலகில் உடன்பிறந்த உணர்வு இயலக்கூடியதே என்பதன் அடையாளமாக உள்ளன எனவும் இக்கூட்டத்தில் எடுத்துரைத்தார்.
ஒவ்வொரு மனிதனின் மாண்பையும் பாதுகாக்கும் வகையில் உருவாக்கப்பட்ட பன்னாட்டுச் சட்டங்கள், போர்க்காலத்தின்போது நன்முறையில் காக்கப்பட்டு செயல்படுத்தப்பட வேண்டும் என்பதையும் நினைவூட்டினார் பேராயர் பலஸ்திரேரோ.
போர்க்காலத்தின்போது தாக்குதல்களில் இராணுவத் தளங்களும் பொதுமக்கள் வாழும் இடங்களும் பிரித்துப் பார்க்கப்பட வேண்டும் என்ற வரைமுறை இருப்பினும், எந்த ஒரு மோதலும் பொது இடங்களைத் தாக்காமல் முடிவடைவதில்லை என்ற கவலையையும் வெளியிட்ட பேராயர், உக்ரைன் மற்றும் மத்தியக் கிழக்குப் பகுதியின் மோதல்களை உதாரணங்களாகக் காட்டினார்.
தீர்வுக்கு இட்டுச் செல்ல விரும்பாத பேச்சுவார்த்தைகளும், பொதுமக்கள் கொல்லப்படுவதை நியாயப்படுத்துவதும், அகதிகள், பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியோர்களுக்கு உதவிகள் சென்றடைவதை தடுப்பதும், மக்கள் நிறைந்த இடங்களில் வெடிகுண்டுகள் பயன்பாட்டையும், கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள், வழிபாட்டுதலங்கள் போன்ற மக்களுக்கு அத்தியாவசியமான அமைப்புக்கள் தாக்கப்படுவதையும் எச்சூழலிலும் தவிர்க்க வேண்டும் என திருப்பீடம் விரும்புகிறது என்றார் பேராயர் பலஸ்திரேரோ.
மனித குலத்திற்கான அசைக்க முடியாத அர்ப்பணத்தில், குறிப்பாக பொதுமக்களின் மனச்சான்றை மீண்டும் உயிர்த்தெழச் செய்வதில் கத்தோலிக்கத் திருஅவையின் பாதையில் செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் செம்பிறைச் சங்கங்கள் தொடர்ந்து நடைபோடுகின்றன எனவும் கூறினார் ஜெனிவாவிலுள்ள ஐ.நா. அலுவலங்களுக்கான திருப்பீடப் பிரதிநிதி, பேராயர் பலஸ்திரேரோ.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்