தேடுதல்

கர்தினால் Mario Grech கர்தினால் Mario Grech 

இறைகுரலுக்கு செவிசாய்த்தால் புதிய பாதைகளை அடையாளம் காணலாம்

அறிவற்ற செல்வன் உவமையானது நம்மை நாமேப் பிரிக்காமல், நமக்குள் ஒற்றுமையைத் தேடவும், நமது ஒருங்கிணைந்த பயணத்தின் பலனை அறுவடை செய்யவும், இந்த நாள்களில் நம்மை நாமே எவ்வாறு தயார்படுத்துவது என்பதையும் வெளிக்காட்டுகிறது.

மெரினா ராஜ் – வத்திக்கான்

இறைகுரலுக்கு செவிசாய்த்தால் நம்மால் புதிய பாதைகளை அடையாளம் காண முடியும் என்றும், எதிர்நோக்கின் திருப்பயணிகளாக, நற்செய்தி அறிவிப்பிற்காகக் காத்திருக்கும் மக்களை நோக்கி நமது பணி சென்றடையும் என்றும் எடுத்துரைத்தார் கர்தினால் மாரியோ கிரேக்.

அக்டோபர் 21 திங்கள்கிழமை வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவிலில் உலக ஆயர் மாமன்றத்தின் உறுப்பினர்கள் பங்கேற்ற திருப்பலிக்கு தலைமையேற்று மறையுரையாற்றியபோது இவ்வாறு கூறினார்  உலக ஆயர்கள் மாமன்றத்தின் பொதுச்செயலர் கர்தினால் மாரியோ கிரேக் .

அறிவற்ற செல்வன் உவமை பற்றிய லூக்கா நற்செய்தியின் வாசகம் பற்றி விளக்கமளித்த கர்தினால் கிரேக் அவர்கள், போதகரே, சொத்தை என்னோடு பங்கிட்டுக்கொள்ளுமாறு என் சகோதரருக்குச் சொல்லும்”  என்று கேட்டவரின் கேள்விக்கு இயேசு உவமை வழியாக பதிலளிக்கின்றார் என்றும், பரம்பரை சொத்தைப் பிரித்தல் என்பது நமக்கு இயல்பானதாக இருந்தாலும், பகிரப்பட்ட நிர்வாகத்துடன் அவை பராமரிக்கப்படுவதே  இயேசுவின் விருப்பமாக இருந்தது என்றும் கூறினார்.

“பிரித்தலை” இயேசு நிராகரிக்கின்றார் என்று எடுத்துரைத்த கர்தினால் கிரேக் அவர்கள், நம்மில் ஒற்றுமையைக் கண்டறியவும், பேராசை மற்றும் பொருள் தேடலுக்கான பிரிவினையின் வேர்களை அடையாளம் காட்டவும் இயேசு உவமை வழியாக சுட்டிக்காட்டுகின்றார் என்றும் கூறினார்.

களஞ்சியங்களில் பொருள்களைச் சேர்த்து வைக்கும் ஆசையின் பின்னால் மறைந்திருக்கும் அறிவற்றதனத்தை நாம் கண்டறியவேண்டும் என்றும், அறிவற்ற செல்வன் உவமையானது நம்மை நாமேப் பிரிக்காமல், நமக்குள் ஒற்றுமையைத் தேடவும், நமது ஒருங்கிணைந்த பயணத்தின் பலனை அறுவடை செய்யவும், இந்த நாள்களில் நம்மை நாமே எவ்வாறு தயார்படுத்துவது என்பதை வெளிக்காட்டுகிறது என்றும் எடுத்துரைத்தார் கர்தினால் கிரேக்.

2021 அக்டோபரில் தொடங்கிய உலக ஆயர்கள் மாமன்றம் வழியாக ஒரு நீண்ட பயணத்தின் பலன்களை அறுவடை செய்யும் நமது பணியில், இயேசு நம்மிடம் ஒப்படைக்கும் பொருள் சார்ந்தவற்றை மட்டுமல்லாது மாமன்றத்தின் வழியாகக் கிடைக்கும் நன்மை மற்றும் அழகை எடுத்துரைக்கின்றவர்களாகவும் நாம் இருக்கின்றோம் என்றும் கூறினார் கர்தினால் மாரியோ கிரேக்.

“என் அருள் உனக்குப் போதும்; வலுவின்மையில்தான் வல்லமை நிறைவாய் வெளிப்படும்” என்ற இறைவார்த்தைக்கேற்ப ஒருங்கிணைந்த பயணமானது பல நிறைபலன்களை நமக்கு தந்துள்ளது என்று கூறிய கர்தினால் கிரேக் அவர்கள், நமது பலவீனங்களையும், காயங்களையும் மறைக்காமல், கடவுளின் மக்களில் இன்று பலன் தரும் கொடைகளைக் காண வாய்ப்பளித்துள்ளது என்றும் கூறினார்.

உவமையில் வரும் மனிதன் தனக்குள் உரையாடிக்கொண்டான் என்று எடுத்துரைத்த கர்தினால் கிரேக் அவர்கள், ஒருங்கிணைந்த பயணத்தில் இருக்கும் நாம் அனைவரும் நமக்குள்ளாகவும் குழுவாகவும் தூய ஆவியாரோடு உரையாடல் மேற்கொள்ள வேண்டும் என்று எடுத்துரைத்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 October 2024, 13:18