தேடுதல்

அருளாளர்பட்ட திருப்பலியின்போது அருளாளர்பட்ட திருப்பலியின்போது 

புதிய அருளாளர்கள் Gaietà Clausellas மற்றும் Antoni Tort

அருளாளர் Antoni Tort காசநோயால் பாதிக்கப்பட்டவர்கள், முதியோர்கள் அருகில் இருந்து அவர்களை பராமரித்தவர் என்றும், ஒருவர் பின் ஒருவராக எல்லோரையும் நம்பிக்கை வாழ்விற்கு அழைத்து வர உதவியர் .

மெரினா ராஜ் – வத்திக்கான்

தேவையில் இருப்பவர்கள் மற்றும் ஏழைகளுக்கு இயேசுவைப்போல உதவிகள் செய்து, பிறரன்புப் பணியாற்றியவர்கள் புதிய அருளாளர்கள் Gaietà Clausellas, Antoni Tort என்றும், தாழ்ச்சி என்னும் பண்பானது அவர்களது தொண்டுப்பணிகளில் அவர்களுடன் இருந்தது என்றும் கூறினார் கர்தினால் மர்செல்லோ செமராரோ.   

நவம்பர் 23 சனிக்கிழமை Barcellonaவில் உள்ள Sagrada Família பேராலயத்தில் மறைசாட்சியாளர்கள் Gaietà Clausellas, Antoni Tort ஆகியோர் அருளாளர்களாக உயர்த்தப்பட்ட திருப்பலியில் ஆற்றிய மறையுரையின்போது இவ்வாறு கூறினார் புனிதர் பட்ட நிலைகளுக்குரிய திருப்பீடத் துறையின் தலைவர் கர்தினால் மர்செல்லோ செமராரோ.

திருவழிபாட்டு ஆண்டின் இறுதியில் இருக்கும் நமக்கு இறைவார்த்தைகள் வழியாக, மீட்பு என்பது அரியணையில் வீற்றிருக்கும் நம் கடவுளாகிய இறைவனுக்கும் ஆட்டுக்குட்டிக்கும் உரியது என்பதை எடுத்துரைக்கின்றன என்றும், அருளாளர்களாக உயர்த்தப்பட்டுள்ள அருள்பணியாளர் Gaietà Clausellas மற்றும் பொது நிலையினர் Antoni Tort இருவரும் நல்ல சமாரியன் போல வாழ்ந்தவர்கள் என்றும் எடுத்துரைத்தார் கர்தினால் செமராரோ.

கிறிஸ்து நம்மை எங்கு வழிநடத்தினாலும் அவரைப் பின்பற்றுங்கள் என்ற தலைப்பில் தனது மறையுரையினை வழங்கிய கர்தினால் செமராரோ அவர்கள், அருளாளர் Antoni Tort காசநோயால் பாதிக்கப்பட்டவர்கள், முதியோர்கள் அருகில் இருந்து அவர்களை பராமரித்தவர் என்றும், ஒருவர் பின் ஒருவராக எல்லோரையும் நம்பிக்கை வாழ்விற்கு அழைத்து வர உதவியர் என்றும் எடுத்துரைத்தார்.

கொலைசெய்யப்பட்ட இடத்திற்கு அழைத்துச்செல்லப்பட்ட அருளாளர் அந்தோணியோ இறக்கும் முன் “Te Deum” என்னும் நன்றி வழிபாட்டு பாடலில் உள்ள “இறைவா எனது நம்பிக்கை உம்மில் இருக்கின்றது” என்ற பாடலை செபித்தார் என்று சுட்டிக்காட்டிய கர்தினால் செமராரோ அவர்கள், திருநற்கருணையை பிறர் அவமதிக்காமல் இருக்கவேண்டி அதனை பிறருக்கும், தனது 5 வயது மகனுக்கும் வழங்கினார் என்றும் கூறினார்.

தான் இறப்பதற்கு முன்பு தனது மகனிடம் உனது இவ்வுலகத் தந்தையை அவர்கள் கொண்டு செல்கின்றார்கள், ஆனால் நான் உன்னை விண்ணகத் தந்தையிடம் ஒப்படைக்கின்றேன் எனக் கூறினார் என்று எடுத்துரைத்தார் கர்தினால் செமராரோ.

கடவுளைப் பார்க்க மிகவும் ஆர்வமாக இருந்த மோசே அவர் தன்னை வழிநடத்திய இடத்திற்கு பின் தொடர்ந்து சென்றார், புதிய அருளாளர்களும் இயேசு தங்களை வழிநடத்திய இடத்திற்கு அவரைப் பின் தொடர்ந்து சென்றனர் என்றும் எடுத்துரைத்தார் கர்தினால் செமராரோ.

அருள்பணியாளர், திருமணமாகி பிள்ளைகள் பெற்றெடுத்தல் என்னும் இருவேறு பணிகளைத் தேர்ந்தெடுத்து வாழ்ந்த அருளாளர்கள், இயேசுவைப் பின்தொடர்வதன் வழியாக தங்கள் வாழ்க்கையில் அவர்கள் தேர்ந்தெடுத்தவற்றை விட கடவுள் தங்களுக்காக தேர்ந்தெடுத்த ஒன்று உள்ளது என்பதைக் கண்டுகொண்டவர்கள் என்றும்  தெரிவித்தார்.

கிறிஸ்துவைப் பின்தொடர்தல் என்பது மரணம் வரை அவரைப் பின்பற்றுதல் என்பதை அருளாளர்கள் இருவரும் நன்கு புரிந்து கொண்டு தங்களது வாழ்க்கையை கிறிஸ்துவிற்காக அர்ப்பணித்தவர்கள் என்றும், இவ்வழியில் பயணிப்பது கடினமாக இருந்தாலும் அதனையும் முழுமனதுடன் ஏற்றுக்கொண்டவர்கள் என்றும் கூறினார் கர்தினால் செமராரோ.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 November 2024, 12:30