சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த இயேசு சபையினரின் அர்ப்பணம்
ஜெர்சிலின் டிக்ரோஸ் வத்திக்கான்
அசர்பைஜானின் பாகுவில் நடைபெறும் காலநிலை மாற்றத்திற்கான 29வது மாநாட்டின், உலகளாவிய அறிக்கை ஒன்றில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த இயேசு சபையினரின் அர்ப்பணம் குறித்து கையெழுத்திட்டுள்ளார் பிரிட்டனின் இயேசுசபை மாநிலத் தலைவர்.
காலநிலை மாற்றம் குறித்த இந்த அறிக்கை மூன்று முக்கியமான நடவடிக்கைகளுக்கு அழைப்பு விடுக்கிறது.
முதலாவது, இழப்பு மற்றும் சேத நிதியை பயனுள்ளதாக பயன்படுத்துவதோடு காலநிலை மாற்றத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு மானிய அடிப்படையிலான ஆதரவை வழங்குவது.
இரண்டாவது, காலநிலை மீள்தன்மை மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றில் முதலீடு செய்வதற்கான வளங்களை நாடுகளுக்கு விடுவிக்க, காலநிலை கடனை இரத்து செய்வது.
மூன்றாவது, பூர்வீகக் குடிகளின் உரிமைகளை மதிக்கும், இயற்கை சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பாதுகாக்கும் மற்றும் இலாபத்தை விட நிலையான வாழ்வாதாரங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் குறைந்த கார்பன் வெளியீட்டு பொருளாதாரங்களுக்கு நியாயமான எரிசக்தி மாற்றங்களை முன்னெடுப்பது.
மேலும், இயேசு சபையினர் ஒரு சூழலியல் மாற்றத்திற்கு அழைக்கப்படுகிறார்கள் என்றும் இவ்வுலகை இன்னும் அதிகமாக கவனித்துக்கொள்ள வேண்டியதன் அவசியத்தை அங்கீகரிக்க வலியுறுத்தப்படுவதாகவும் தெரிவித்துள்ளார் அருள்பணி Peter Gallagher.
திருத்தந்தையின் போதனைகள் அனைத்து படைப்புகளின் நல்வாழ்வுக்காக நடவடிக்கை எடுக்க நம்மை ஊக்குவிக்கின்றன என்றும், காலநிலை மாற்றத்திற்கான உலகளாவிய அறிக்கையை மனதில் கொண்டு, பிரிட்டனின் இயேசு சபை அருள்பணி Peter Gallagher அவர்கள், இவ்வுலகை பாதுகாக்க அழைப்பு விடுக்கும் கட்டுரை ஒன்றையும் எழுதியுள்ளார்.
நவம்பர் 11 முதல் 22 வரை நடைபெறும், ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றம் குறித்த 29வது மாநாட்டில் ஏறக்குறைய 200 நாடுகள் பங்கேற்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்