தேடுதல்

உரை வழங்கும் கர்தினால் பரோலின் உரை வழங்கும் கர்தினால் பரோலின்  

சிரியாவில் மனித மாண்பு மீட்டெடுக்கப்படும் : கர்தினால் பரோலின்

சிரியாவில் ஆட்சிக்கு வருபவர்கள் அனைவருக்கும் திறந்த மற்றும் மரியாதைக்குரிய ஆட்சியை உருவாக்க முயற்சிப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது : கர்தினால் பியெத்ரோ பரோலின்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

சிரியாவில் ஏற்பட்டு வரும் துரிதமான முன்னேற்றங்கள் முஸ்லீம் உலகத்துடன் தொடர்ந்து உறவு பாலங்களைக் கட்டுவதற்கு ஒரு நல்ல வாய்ப்பை வழங்குகின்றன என்று கூறினார் திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின்.

"உரையாடல்களுக்கான ஆய்வுகள். அரபு-இஸ்லாமிய ஆய்வுகளுக்கான அல் இசா ஆராய்ச்சி விருது," என்ற தலைப்பில் மிலானில் உள்ள தூய திருஇருதய ஆண்டவர் கத்தோலிக்கப் பல்கலைக் கழகத்தில் இடம்பெற்று வரும் நிகழ்வொன்றில் பங்கேற்றுவரும் கர்தினால் பரோலின் அவர்கள், செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்தபோது இவ்வாறு குறிப்பிட்டார்.

சிரியாவில் என்ன நடக்கிறது என்பதைப் பற்றி நாம் அனைவரும் கவலைப்படுகிறோம் என்று தான் நம்புவதாகக் குறிப்பிட்ட கர்தினால் பரோலின் அவர்கள்,  குறிப்பாக நிகழ்வுகள் வெளிப்படும் வேகத்தின் காரணமாக அங்கு என்ன நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்வது கடினம் என்றும்,  இவ்வளவு வலுவானதாக, திடமானதாக செயல்பட்ட ஓர் ஆட்சி, குறுகிய காலத்தில் முற்றிலுமாக அழிக்கப்பட்டது என்னை வியப்பில் ஆழ்த்துகிறது என்றும் கூறினார்.

அங்கு என்ன நிகழ்கிறது என்பதைப் பொறுத்திருந்துப் பார்ப்போம் என்று தெரிவித்த கர்தினால், கிறித்தவர்கள் மற்றும் அங்குள்ள அனைவருக்கும் பாதுகாப்பும் மரியாதையும் உள்ள ஓர் எதிர்காலம் கண்டிப்பாக ஏற்படும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.  

இப்படிப்பட்டதொரு அருமையான நிகழ்வை சிறப்பாக நடத்தும் இப்பல்கலைக் கழகத்தைத் தான் மிகவும் பாராட்டுவதாகக் கூறிய கர்தினால், உலகம் எதிர்கொள்ளும் பல பிரச்சனைகள் மற்றும் சிரமங்களுக்குப் பதிலளிப்பதில் ஒத்துழைப்பதே இன்றைய சவாலாக அமைந்துள்ளது என்றும், நாம் ஒன்றிப்பையும் ஒத்துழைப்பையும் மீட்டெடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 December 2024, 11:43