தேடுதல்

முதியோருடன் திருத்தந்தை (சிங்கப்பூர் 13.09.2024) முதியோருடன் திருத்தந்தை (சிங்கப்பூர் 13.09.2024) 

முதியோரின் இருப்பு, முழு சமுதாயமும் வளர்வதற்கான ஒரு வாய்ப்பு

பேராயர் பாலியா : நம் சமூகத்தில் வாழும் மூத்த குடிமக்கள் அவர்களின் உரிமைகள் மற்றும் கடமைகள் குறித்த முதிர்ச்சியான உணர்வுடன் நடத்தப்பட வேண்டும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

நம் சமூகத்தில் வாழும் மூத்த குடிமக்கள் அவர்களின் உரிமைகள் மற்றும் கடமைகள் குறித்த முதிர்ச்சியான உணர்வுடன் நடத்தப்பட வேண்டும் என அழைப்புவிடுத்தார் வாழ்வுக்கான திருப்பீடக் கழகத்தின் தலைவர் பேராயர் வின்சென்சோ பாலியா.

வத்திக்கானுக்கான பஹ்ரைன், அரபு ஐக்கிய குடியரசு, ஈராக், குவைத், மொரோக்கோ, கத்தார், துனிசியா, ஏமன், அரபு நாடுகளின் கூட்டமைப்பு ஆகியவைகளின் தூதுவர்களுடன் வத்திக்கானில் இடம்பெற்ற வட்டமேசை மாநாட்டில் உரையாற்றிய பேராயர் பாலியா அவர்கள், முதியோரின் உரிமைகள் குறித்த உடன்பாட்டு ஒப்பந்தத்தை வெளியிட்டதோடு, முதியோரை ஒரு பிரச்சனையாகப் பார்க்காமல், முழு சமுதாயமும் வளர்வதற்கான ஒரு வாய்ப்பாகப் பார்க்கவேண்டும் என அழைப்பு விடுத்தார்.

அரபு மற்றும் ஐரோப்பிய சமூகங்களில் முதியோரின் இருப்பு குறித்து மீண்டும் சிந்தித்தல் என்ற தலைப்பில் இடம்பெற்ற இந்த வட்டமேசை மாநாட்டில், முதியோருக்கான நல ஆதரவுப்பணிகள் மேம்படுத்தப்படவேண்டும் என்ற கருத்து வலியுறுத்தப்பட்டது.

முதியோரின் மாண்பு பாதுகாக்கப்படுதல், அவர்களை பொறுப்புடன் பராமரிப்பதற்குரிய நம் கடமைகளும் அவர்களின் உரிமைகளும் என்பது குறித்தும் எடுத்துரைத்தார் பேராயர்.

கருணைக்கொலைக்கு எதிராக நாம் ஒவ்வொருவரும் செயலாற்றவேண்டும் என்பதையும் வலியுறுத்திய பேராயர் பாலியா, முதியோரிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது ஏராளமாக இருப்பதால் அவர்களின் இருப்பு நமக்கு பெரும்பலம் என மேலும் எடுத்துரைத்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 December 2024, 13:50