யூபிலி நிகழ்வுகளை ஒலிபரப்பும் வத்திக்கான் தகவல்தொடர்புத்துறை
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
டிசம்பர் 24-ஆம் தேதி கிறிஸ்துமஸ் இரவு அன்று, எதிர்நோக்கின் யூபிலியைத் தொடங்குவதற்காக, புனிதக் கதவைத் திறப்பதுடன், ஆண்டு முழுவதும் இறைவேண்டல் செய்யவும், ஆன்மிக ரீதியில் தங்களைத் தயாரிக்கவும் அனைவரையும் அழைக்கிறார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும் யூபிலி எதிர்நோக்கை வலுப்படுத்துவதையும், அன்றாட வாழ்வில் கிறிஸ்துவின் பிரசன்னத்தை அங்கீகரிக்க உதவுவதையும், விசுவாசிகளை எதிர்நோக்கின் திருப்பயணிகளாக மாற்றுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஆகவே, இந்த உலகளாவிய நிகழ்வு வத்திக்கான் வானொலி, வத்திக்கான் செய்திகள் மற்றும் பிற துணைவர்களின் தளங்கள் உட்பட வத்திக்கான் ஊடகங்கள் வழியாகப் பரவலாகப் பகிரப்படும் என்று அறிவித்துள்ளது வத்திக்கானின் தகவல்தொடர்புத்துறை.
53 மொழிகளில் ஒலிபரப்பப்படும் வத்திக்கான் செய்திகள், 2025-ஆம் ஆண்டு யூபிலி பற்றிய விரிவான செய்திகளை வழங்கும், முக்கிய நிகழ்வுகளின் நேரடி ஒலிபரப்புகள், உயர்தர படங்கள் மற்றும் சைகை மொழி உட்பட பல மொழிகளில் வர்ணனைகள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எளிதாகப் பகிர்வதற்கான முக்கியத் தருணங்களை முன்னிலைப்படுத்தும் சிறிய காணொளிகள், யூபிலியின் முக்கியத்துவத்தைப் பிரதிபலிக்கும் மத மற்றும் கலாச்சார பிரமுகர்களுடன் சிறப்பு நேர்காணல்கள், ஓலி-ஒளிபரப்புகள் (Vodcasts) மற்றும் வலையொலிபரப்புகள் (podcasts), ஆன்மிகச் சிந்தனைகள், நம்பிக்கையின் கதைகள் மற்றும் திருப்பயண சாட்சியங்கள் என மூவகையான வழிகளில் ஒளிபரப்புகள் இடம்பெறும் என்றும் விளக்கப்பட்டுள்ளது.
இந்தப் பல்லூடகச் செய்திகளின் பயணம் உலகெங்கிலும் உள்ள விசுவாசிகளுக்கு, குறிப்பாக, உரோமை நகருக்குப் பயணித்து வர முடியாதவர்களுக்கு யூபிலியின் ஆன்மிக, வரலாற்று மற்றும் கலாச்சார அம்சங்களைக் கொண்டு வரும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இது ஒரு ஆழமான, அணுகக்கூடிய அனுபவத்தை உருவாக்கும், எண்ணியல் உலகத்தை (digital world) நிகழ்வின் ஆன்மிகப் பரிமாணத்துடன் இணைக்கும், இறை நம்பிக்கை மற்றும் எதிர்நோக்கின் இந்த முக்கியமான தருணத்தில் செயலில் பங்கேற்பதை ஊக்குவிக்கும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்