மனம் திரும்புதல், மனமாற்றத்தின் அருளை வழங்கும் கடவுளின் அன்பு
மெரினா ராஜ் – வத்திக்கான்
கடவுளின் அன்பு எவ்வளவு மகத்தானது என்பதை நாம் ஒவ்வொருவரும் கண்டறிய உதவும் வகையில் காணாமல்போன மகன் உவமையில் இயேசு வெளிப்படுத்தினார் என்றும், கடவுளின் அன்பு நம்முடைய அன்பிலிருந்து வித்தியாசமானது, மனம்திரும்புதல் மற்றும் மனமாற்றத்தின் அருளை நமக்கு வழங்குகின்றது என்றும் கூறினார் பேராயர் ரீனோ பிசிகெல்லா.
மார்ச் 30, ஞாயிற்றுக்கிழமை உரோமில் உள்ள தூய அந்திரேயா ஆலயத்தில் நடைபெற்ற இறைஇரக்கத்தின் மறைப்பணியாளர்களுக்கான சிறப்புத் திருப்பலியின்போது இவ்வாறு கூறினார் புதிய வழிகளில் நற்செய்தி அறிவித்தலை ஊக்குவிக்கும் திருப்பீடத்துறையின் தலைவர், பேராயர் ரீனோ பிசிகெல்லா.
அன்பு வாழ்வை மாற்றுகின்றது, மன்னிப்பு புதிய வாழ்க்கையை மீட்டெடுக்கின்றது என்றும், பகிர்தல் என்பது கடவுளால் நமக்குக் கொடுக்கப்பட்ட தாராள மனப்பான்மையின் பலன் என்றும் எடுத்துரைத்தார் பேராயர் ரீனோ பிசிகெல்லா.
என்னுடையதெல்லாம் உன்னுடையதே
‘மகனே, நீ எப்போதும் என்னுடன் இருக்கிறாய்; என்னுடையதெல்லாம் உன்னுடையதே” (லூக்கா:15:31) என்ற இறைவார்த்தையின் வழியாகக் கடவுள், நாம் எப்போதும் அவருடன் இருப்பவர்கள் என்பதை எடுத்துரைக்கின்றார் என்றும், அருள்பணியாளர்கள் ஒவ்வொருவரும் கடவுளுடனான தங்களது உடனிருப்பை உணர்ந்துகொள்ளாவிட்டால் நாம் செய்யும் செயல்கள் பலனளிக்காது என்றும் கூறினார் பேராயர் பிசிகெல்லா.
அருள்பணியாளர்கள் தங்களது பணிகளை வழக்கமானதாக, திரும்ப திரும்ப செய்யப்படும் ஒன்றாகக் கருதினால் அது பலனற்றதாக மாறிவிடும் என்று தெரிவித்த பேராயர் பிசிகெல்லா அவர்கள், தூய மறைபொருள் வழியாக வெளிப்படும் கடவுளின் உடனிருப்பை நாம் எப்போதும் மற்றவர்களுக்குக் கொண்டு செல்பவர்களாக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இறைத்தந்தையின் சிந்தனை மற்றும் அன்பின் ஆழத்தில், அவரது செயல்பாடுகளைப் புரிந்துகொள்ள, அதில் மேலும் நுழைய, அவரது உடனிருப்பு நம்மை வழிநடத்த வேண்டும் என்று கூறிய பேராயர் பிசிகெல்லா அவர்கள், "என்னுடையது எல்லாம் உன்னுடையது” என்ற இறைத்தந்தையின் உடனிருப்பை நாம் உணர்ந்தால் அன்பின் வெளிப்படையாக நமது வாழ்வு இருக்கும் என்றும் தெரிவித்தார்.
தந்தையின் அன்பு
தனது மகனுக்காகக் காத்திருந்த தந்தையைப் போல நாமும் தொலைவில் இருப்பவர்களின் தேவையை உடனடியாகப் புரிந்து கொள்பவர்களாக இருக்கவேண்டும் என்று சுட்டிக்காட்டிய பேராயர் அவர்கள், தொலைநோக்கு பார்வை, நம் எண்ணங்களிலும் செயல்களிலும் அடிக்கடி வெளிப்படும்போது நமது குறுகியப்பார்வை களையப்பட்டு, நமது இதயங்கள் அகலமாக்கப்படுகின்றன என்றும் கூறினார்.
தனது மகனைத் தொலைவில் கண்ட தந்தை விரைந்து அவனை எதிர்கொண்டு சென்றது போல அருள்பணியாளர்கள், பாவிகள் தங்களிடம் வரவேண்டும் என்று காத்திராமல் அவர்களை தேடிச்செல்ல வேண்டும் என்றும், தனது தந்தை, வீடு, குடும்பம் ஆகியவற்றை விட்டுவிட்டு தொலைதூரம் சென்ற மகன், தனது வாழ்க்கை அர்த்தமற்றதாக இருப்பதை உணர்ந்து மீண்டும் இல்லம் திரும்பினான் என்றும் எடுத்துரைத்தார்.
தந்தையின் இறுக்கமான அணைப்புக்கு ஈடாக எந்த ஒரு மன்னிப்பிற்கான வார்த்தையும் தேவைப்படவில்லை என்று சுட்டிக்காட்டிய பேராயர் அவர்கள், மன்னிப்பு எதிர்காலத்தை நேரடியாகப் பார்க்கத் தூண்டுகிறது, தகுதியான முறையில் வாழ உதவுகின்றது என்றும் எடுத்துரைத்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்