நோயாளர்கள் மற்றும் உலக நலவாழ்விற்கான யூபிலி நாள்
மெரினா ராஜ் – வத்திக்கான்
எதிர்நோக்கு, மருத்துவர்களின் மரபணுவில் இணைந்துள்ளது என்றும், போர்ச்சூழல் நிலவும் பகுதிகளிலிருந்து வரும் குழந்தைகளுக்கு எதிர்நோக்கை அளித்து வருகின்றோம் என்றும் தெரிவித்துள்ளார் நோயாளர்கள் மற்றும் உலக நலவாழ்விற்கான யூபிலி நாள் பொறுப்பாளர் மருத்துவர் Lucia Celesti.
ஏப்ரல் 5, சனிக்கிழமை முதல் 6, ஞாயிற்றுகிழமை வரை வத்திக்கானில் சிறப்பிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நோயாளர்கள் மற்றும் உலக நலவாழ்விற்கான யூபிலி நாளை முன்னிட்டு நடைபெற்ற கூட்டத்தின்போது இவ்வாறு தெரிவித்துள்ளார் உரோம் நகர் குழந்தை இயேசு மருத்துவமனை, குழந்தைகள் நல மருத்துவர் Lucia Celesti.
போரில் குண்டுவெடிப்புக்கு ஆளான குடும்பத்தை வரவேற்றல், தாங்கள் வாழும் இல்லத்தை, நாட்டை, நகரத்தைத் தாக்கியவர்களைக் குறித்த வெறுப்புணர்வைக் கொண்டிருக்கும் மக்களை அன்புடன் வரவேற்றல் போன்றவை அவர்கள் மத்தியில் இருக்கும் எதிர்மறையான உணர்வை உடைத்தெறிய உதவுகின்றது என்றும் எடுத்துரைத்துள்ளார் Celesti.
அன்புடன் அவர்களை வரவேற்று, உதவிகள் புரிவது, அவர்கள் அந்த அன்பைப் பிறருடன் பகிர்ந்துகொள்வதற்கு வழிவகுக்கும் என்று வலியுறுத்தியுள்ள Celesti அவர்கள், நமக்கு அடுத்திருப்போருடன், உடனிருந்து அவரைக் காக்கும் அன்பின் அடையாளமாக இந்த யூபிலி நாள் சிறப்பிக்கப்பட இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் சரகோஷாவில் இருக்கும் தூய ஜார்ஜ் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் செவிலியராகப் பணியாற்றிவரும் மருத்துவர் Rocìo Bellido Octavio அவர்கள் எடுத்துரைக்கையில் தொற்று நோய்க்காலத்தில் பல இறப்புக்கள், பொருளாதார நெருக்கடிகள், சமாளிக்க முடியாத பிரச்சனைகள் போன்றவை ஏற்பட்டபோது கடவுள் என்றும் நம்மோடு இருக்கின்றார் என்று நம்பிக்கையுடன் செயல்பட்டதாகக் கூறினார்.
கடினமான சூழல்களில் தான் கொண்டிருந்த நம்பிக்கையானது அந்த பிரச்சனை நிறைந்த சூழலைப் புரிய வைக்கவில்லை மாறாக, அதனை நிர்வகிப்பதற்கான வலிமையைத் தந்ததாகவும், மூச்சுவிடக்கூட முடியாத நிலையில் நம்பிக்கை ஒன்றே தனக்கு உயிர்மூச்சு அளித்ததாகவும் எடுத்துரைத்தார்.
நோயாளர்களுக்கான யூபிலி நாள்
வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவிலில் ஏப்ரல் 5 மற்றும் 6 ஆகிய நாள்களில் உலகெங்கும் வாழும் நோயாளர்களுக்கான யூபிலி நாள் சிறப்பிக்கப்பட உள்ளது.
எதிர்நோக்கின் திருப்பயணிகள் என்ற மையக்கருத்தில் சிறப்பிக்கப்பட்டு வரும் 2025 யூபிலி ஆண்டில் இதுவரை 6 நிலைகளில் யூபிலி நாள்கள் சிறப்பிக்கப்பட்டன. உலகக் கத்தோலிக்கத் தகவல் தொடர்புத்துறையினர், காவல் மற்றும் பாதுகாப்புப்படையினர், கலைஞர்கள், திருத்தொண்டர்கள், தன்னார்வலர்கள், இறை இரக்கத்தின் மறைப்பணியாளர்கள் என யூபிலி நாள்கள் சிறப்பிக்கப்பட்ட நிலையில், ஏப்ரல் 5, 6 ஆகிய நாள்களில், நோயாளர்கள் மற்றும் உலக நலவாழ்வுக்கான யூபிலியானது கொண்டாடப்பட இருக்கின்றது.
ஏறக்குறைய 90 நாடுகளில் இருந்து ஏறக்குறைய 20,000 மக்கள் வருவார்கள் என்றும் வருகின்ற மக்கள் சனிக்கிழமை காலை 8 மணிமுதல் மாலை 5 மணிவரை புனித கதவு வழியாக நுழைந்து ஒப்புரவு அருள் அடையாளம் பெறுவார்கள். ஏப்ரல் 6, ஞாயிறு உரோம் உள்ளுர் நேரம் காலை 10.30 மணியளவில் வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவிலில் நடைபெறும் சிறப்புத் திருப்பலியினை புதிய வழிகளில் நற்செய்தி அறிவித்தலை ஊக்குவிக்கும் திருப்பீடத்துறையின் தலைவர், பேராயர் ரீனோ பிசிகெல்லா அவர்கள் தலைமையேற்று வழிநடத்த உள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்