திருத்தந்தை புனித இரண்டாம் ஜான் பால் நினைவுதினத் திருப்பலி
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
“திருத்தந்தை புனித இரண்டாம் ஜான் பால் அவர்கள், தன்னை இறைத்தந்தையின் பரிவிரக்கமுள்ள அரவணைப்பில் ஒப்படைத்தபோது, உலகம் இறைவேண்டலில் ஒன்றுபட்டது" என்று கூறினார் திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின்.
ஏப்ரல் 2, இப்புதன்கிழமையன்று, திருத்தந்தை புனித இரண்டாம் ஜான் பால் அவர்கள் இறைபதமடைந்து இருபது ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, புனித பேதுரு பெருங்கோவிலில் நிறைவேற்றப்பட்ட திருப்பலியின் மறையுரையில் இவ்வாறு கூறினார் கர்தினால் பரோலின்.
திருத்தந்தையின் இறுதித் தருணங்களைப் பற்றிப் பேசுகையில், திருத்தந்தை புனித இரண்டாம் ஜான் பால் அவர்கள் சிலுவையைத் தழுவிய வலிமைமிகு படங்களையும், உலகிற்கு அவர் அமைதியாக வழங்கிய உயிர்ப்பு ஞாயிறு ஆசிரையும் நினைவு கூர்ந்தார் கர்தினால் பரோலின்.
யோவான் நற்செய்தியிலிருந்து எடுக்கப்பட்ட அவரின் ஆழ்ந்த நம்பிக்கையை வலியுறுத்திய பரோலின் அவர்கள், இந்த நம்பிக்கைதான் அவரது வாழ்நாள் முழுவதும் அவரை நிலைநிறுத்தி, சவால்களின் மூலம் அவரை அசைக்க முடியாத துணிச்சலுடன் வழிநடத்தியது என்றும் குறிப்பிட்டார்.
கடவுளின் பார்வையின் கீழ் வாழ்வது குறித்த புனித இரண்டாம் ஜான் பால் அவர்களின் ஆழமான விழிப்புணர்வை தனது மறையுரையில் எடுத்துக்காட்டிய கர்தினால், “இது உண்மையைத் துணிவுடன் நிலைநிறுத்தவும், மனித மாண்பைப் பாதுகாக்கவும், நற்செய்தியைப் பரப்பவும் அவருக்கு அதிகாரம் அளித்தது” என்றும் சுட்டிக்காட்டினார்.
“குறிப்பாக, 1981-ஆம் ஆண்டு அவர்மீது நடத்தப்பட்ட படுகொலை முயற்சியில் இருந்து தப்பிய பிறகு, புனித இரண்டாம் ஜான் பால் அவர்கள், இறை இரக்க ஆண்டவரின் பாதுகாப்பு மீதான நம்பிக்கையை வலியுறுத்தினார்” என்றும், “அதை அவர் இறை இரக்க ஆண்டவரின் ஒரு கொடையாகவே கண்டார்” என்றும் குறிப்பிட்டார்.
2000 மாம் ஆண்டு யூபிலி விழாக் கொண்டாட்டத்தில், புனித இரண்டாம் ஜான் பால் அவர்களின் பங்களிப்பையும், அமைதி, மனித மாண்பு மற்றும் போருக்கு எதிரான அவரது வேண்டுகோள்கள் அனைத்தைப் பற்றியும் தனது மறையுரையில் எடுத்துக்காட்டினார் கர்தினால் பரோலின்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்