நற்செய்திகளின் முகங்கள் – வரி வசூலிப்பவரான மத்தேயு
மெரினா ராஜ் – வத்திக்கான்
இயேசுவின் உயிர்ப்பு நாள்களை மிகச்சிறப்பாக, பயனுள்ள வகையில் கொண்டாடும் பொருட்டு வத்திக்கான் நூலகம், வத்திக்கான் அருங்காட்சியகம் மற்றும் இத்தாலிய அரசு தொலைக்காட்சியான ராய் 1 உடன் இணைந்து திருப்பீடச்செய்தித் தொடர்புத்துறையானது இயேசுவின் வாழ்வில் இடம்பெற்ற சந்திப்புக்கள் குறித்த தொடரை மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளது.
ஏப்ரல் 4, வெள்ளிக்கிழமை முதல் ஆரம்பமாகிய “நற்செய்திகளின் முகங்கள்” (The faces of the Gospels) என்ற இத்தொடரின் முதல் காணொளியானது 2022 -ஆம் ஆண்டு உயிர்ப்பு நாளன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ராய் 1 தொலைக்காட்சியில் பகிர்ந்துகொண்ட கருத்துக்களான வரி வசூலிக்கும் மத்தேயுவைப் பற்றி எடுத்துரைக்கின்றது.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மத்தேயு நற்செய்தியாளர் பற்றி எடுத்துரைத்தக் கருத்துக்களை அவரது குரலில், காணொளியாக வடிவமைத்து வெளிவந்துள்ள இப்புதிய தொடரானது 18 வாரங்களாக தொடர்ந்து வர உள்ளது என்றும், இயேசுவின் வாழ்வில் அவர் சந்தித்த நபர்களைப் பற்றியும் அவர்களது வாழ்வு, வார்த்தை ஆகியவை நமக்கு எடுத்துரைக்கும் செய்தி பற்றியும் திருத்தந்தையின் குரலில் இத்தொடர் வலியுறுத்த இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.
திருப்பீடச் செய்திப்பிரிவுத் தலைவர் முனைவர் அந்திரேயா தொர்னியெல்லி மற்றும் இத்தாலிய ஊடகவியலாளர் லூசியோ புருனெல்லி இணைந்து உருவாக்கியுள்ள இக்காணொளித் தொடரினை ரெனாத்தோ செரிசோலா இயக்கி படமாக்கியுள்ளார், மைக்கேலேஞ்சலோ பால்மாச்சி அவர்களின் இசை பயன்படுத்தப்பட்டுள்ளது.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கடந்த பிப்ரவரி 14, வெள்ளிக்கிழமை மூச்சுக்குழல் அழற்சி நோய் சிகிச்சைக்கென ஜெமெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாள் முதல், மார்ச் 23, ஞாயிறு வத்திக்கான் சாந்தா மார்த்தா இல்லம் திரும்பி ஓய்வெடுத்துக்கொண்டிருக்கும் இந்நாள் வரை, திருத்தந்தையின் குரலை நாம் குறைவாகவே கேட்க முடிகின்றது என்றும், எனவே திருத்தந்தையின் குரலில் இக்காணொளி வெளிவருவது சிறப்பான முயற்சி என்றும் தெரிவித்துள்ளார் அந்திரேயா தொர்னியெல்லி.
ஓய்வில் இருக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் குரலை மீண்டும் கேட்கவும், இயேசுவைப் பற்றியும், அவரது உவமை மற்றும் சந்திப்புக்கள் குறித்த மிக ஆழமான தருணங்களில் சிலவற்றைப் பற்றி சிந்திக்கவும் இது ஒரு வாய்ப்பாக இருக்கின்றது என்றும் கூறியுள்ளார் தொர்னியெல்லி.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்