விதையாகும் கதைகள்: பகைவரின் வீரத்தை மதிக்கும் பண்பாளர்
மேரி தெரேசா: வத்திக்கான்
மொகலாயப் பேரரசரான ஔரங்கசீப், ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகள் ஆட்சி செய்தவர். இவருடைய வாழ்வுமுறை மிக எளிமையாக இருந்தது. ஆனால் அவருடன் இருந்த அமைச்சர்கள், அவர் விருப்பத்திற்கு மாறாக பலவற்றை அவர் மீது திணித்தார்கள் என்று சொல்லப்படுகின்றது. இவர் பல்லக்கில் பயணம் மேற்கொள்வதை மறுத்தபோது, அமைச்சர்கள், மன்னர் நடந்து செல்வது சரியாக இருக்காது என்று அறிவுறுத்தியுள்ளனர். அதற்கு அவர் இவ்வாறு சொன்னார். மன்னரோடு அவருடைய பணியாள்கள் இருவரும் பல்லக்கில் அமர்ந்து செல்ல, அம்மூவரையும், ஆறு பேர் சுமக்க வேண்டும். மன்னர்கள், தங்கள் வாயின் துர்நாற்றம் தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக, எப்போதும் வாசனைப் புகையிலையை மென்று கொண்டிருப்பர். அவற்றைத் துப்புவதற்காக வெள்ளியிலோ, பீங்கானிலோ வடிவமைக்கப்பட்ட கிண்ணம் ஒன்றும் அந்த பல்லக்கிலேயே இருக்கும். பல்லக்குத் தூக்கிகள், கால்வலிக்க, இவர்களைத் தூக்கிச் செல்ல வேண்டும், இதென்ன பழக்கம் என்று சாடினார். அடுத்து மன்னர்கள் அமரும் மயில் அரியணை இவ்வளவு பெரியதாக இருக்க வேண்டுமா என்றும் அமைச்சர்களிடம் கேட்டார், ஔரங்கசீப். அதற்கு மற்றவர்கள், அரசே, தங்களுடைய அரண்மனையில், தனிப்பட்ட வாழ்வில் எவ்வளவு எளிமையாக வேண்டுமானாலும் இருக்கலாம், ஆனால் தர்பாரில் தாங்கள் இருக்கின்றபோது மயில் அரியணையில்தான் அமர வேண்டும் என்று கூறினர். ஔரங்கசீப் ஆட்சிக்கு வந்தபின்னர், மொகலாயப் பேரரசருக்கு எதிராகப் போரிட்ட அரசர் ஜெய்மாலி, சித்தூர் அரசர் பட்டா ஆகிய இருவருடைய சிலைகளையும், மாளிகைக்கு முன்னால், கருங்கல்லில் செய்யப்பட்ட இரண்டு யானைகளின் மீது வைக்கச் சொன்னார். அப்போது அமைச்சர்கள் அவரிடம் எதிரிகளை மகிமைப்படுத்துவது பற்றிக் கேட்டபோது, அவர்கள் நம்மை எதிர்த்துப் போரிட்டிருக்கலாம், ஆனால் களத்தில் கடைசி வரைக்கும் கலங்காமல் நின்று போரிட்ட மாவீரர்கள் அவர்கள். எதிரிகளாக இருந்தாலும் வீரர்களை மதிக்க வேண்டும் என்று சொன்னார்.
மயில் அரியணை என்பது, இரண்டடி உயரமுள்ள நான்கு கால்களால் ஆனது. அதன்மீது ஒரு விதானம். அந்த விதானத்தின் மீது 12 சிறிய தூண்கள். அந்த 12 தூண்களில் மூன்றில் மரகத மாலை, வைர மாலை, சிவப்புக்கல் மாலை ஆகியவை தொங்கவிடப்பட்டிருக்கும். மற்றொரு தூண், வாள்போன்ற வடிவம். இன்னொன்று வில் போன்ற வடிவம். அதற்கு மேலே, ஒரு நாற்காலி, ஏறத்தாழ ஒரு படுக்கைபோல அழகான வேலைப்பாடுகளோடு அமைந்திருந்ததுதான், அன்றைய மொகாலய பேரரசின் அரியணை. இது தற்போது டெக்ரான் ஷாவினுடைய அரண்மனையில், அருங்காட்சியகத்தில் உள்ளது. அதன் மதிப்பு, 26 இலட்சம் டாலருக்கு அதிகம் என்று சொல்கின்றனர்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்