தேடுதல்

பத்மஸ்ரீ விருது வாங்குகிறார் துளசி கவுடா பத்மஸ்ரீ விருது வாங்குகிறார் துளசி கவுடா  

வாரம் ஓர் அலசல்: பிறருக்காக வாழ்கின்ற இயற்கை

ஆறுகள் தங்களின் நீரை தாங்களே குடிப்பதில்லை, மரங்கள் தங்களின் கனிகளை தாங்களே உண்பதில்லை, சூரியன் தனக்கே ஒளிகொடுப்பதில்லை, மலர்கள், தங்களின் நறுமணங்களை தங்களுக்காகப் பரப்புவதில்லை - திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான்

துளசி கவுடா (Tulsi Gowda). இவர் இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் மிகவும் பிரபலமான சுற்றுச்சூழல் ஆர்வலர். பல்வேறு வகையான தாவரங்கள் மற்றும், மூலிகைகள் பற்றிய பரந்த அறிவைக் கொண்டுள்ள இவர், காடுகளின் கலைக்களஞ்சியம் என்றும் அழைக்கப்படுகிறார். மரங்களின் தேவதை எனவும் போற்றப்படும் இவர், கடந்த அறுபது ஆண்டுகளுக்கு மேலாக, தான் வாழும் பகுதிகளில் புதிய புதிய மரக்கன்றுகளை நட்டு, அவற்றுக்குத் தண்ணீர் ஊற்றி, சுற்றுச்சூழலைப் பாதுகாக்க தனது சிறப்பான பங்களிப்பை அளித்து வருகிறார். சுற்றுச்சூழல் பற்றிய தனது அறிவை, தனது இடத்திற்கு வருகின்ற புதிய தலைமுறைகளோடு ஆர்வமுடனும் இவர் பகிர்ந்துகொள்கிறார். இந்த இவரது மகத்தான அர்ப்பணத்தைக் கவுரவிக்கும் விதமாக, இந்திய அரசு, 2020ம் ஆண்டில் இவருக்கு, இந்தியாவின் நான்காவது உயரிய குடிமகன் விருதான பத்மஸ்ரீ விருதை அறிவித்தது. துளசி கவுடா அவர்கள், அந்த விருதை, நடப்பு நவம்பர் மாதம் 09ம் தேதி, அதாவது கடந்த செவ்வாயன்று, இந்தியக் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் அவர்களிடமிருந்து பெற்றார். அச்சமயத்தில், 77 வயது நிரம்பிய துளசி கவுடா அவர்கள், சாதாரண எளிய வேஷ்டி போன்ற மரபு ஆடையில், மேல் சட்டையின்றி, வெற்றுக் காலோடு கம்பீரமாக நடந்துசென்றபோது அரங்கத்தில் பலத்த கைதட்டல்கள் ஒலித்தன. துளசி கவுடா அவர்கள் பத்மஸ்ரீ விருதைப் பெற்ற அதே நிகழ்வில், அவர் உட்பட 61 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் உட்பட 119 பத்ம விருதுகள் வழங்கப்பட்டன.

பத்மஸ்ரீ துளசி கவுடா

பத்மஸ்ரீ துளசி கவுடா அவர்கள், 1944ம் ஆண்டு, கர்நாடகா மாநிலத்தின் உத்தர கன்னடா மாவட்டத்தில் Honnalli என்ற கிராமத்தில், ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர். Halakki என்ற பழங்குடியினத்தைச் சேர்ந்த இவர், தனது 2வது வயதில் தந்தையை இழந்தார். சிறுமியாக இருந்தபோதே, தன் தாயோடு சேர்ந்து, நாற்றுப் பண்ணைகளில் வேலை செய்யத் துவங்கினார். பள்ளிக்கூட வாசனையே அறியாத இவருக்கு, வளர்இளம் பருவத்திலேயே திருமணமும் நடைபெற்றது. முப்பது ஆண்டுகளுக்கு மேலாக, அரசு நடத்திய நாற்றுப் பண்ணைகளில் தினக்கூலியாக வேலைசெய்த இவரது திறனைக்கண்ட வனத்துறை, இவரை நிரந்தரப் பணியில் சேர்த்துகொண்டது. துளசி கவுடா அவர்கள், பதினைந்து வருடங்கள் வனத்துறையில் வேலைசெய்தபின்னர், தனது எழுபதாவது வயதில் ஓய்வுபெற்றார். பணிஓய்வும், வயதும், மிகக் குறைந்த ஓய்வூதியமும், குடும்பத்தின் ஏழ்மையும், காடுகளைப் பாதுகாக்கவேண்டும் என்ற இவரது ஆர்வத்திற்கு தடையாக இருப்பதாகத் தெரியவில்லை. ஏனெனில் துளசி கவுடா அவர்கள், பணி ஓய்வுக்குப் பிறகும், நடவு நடவடிக்கைகளைத் தொடர்ந்து செய்து வருகின்றார்.

துளசி கவுடா அவர்கள், வளமான நிலங்கள் தரிசாக மாறுவதைத் தடுக்க, இதுவரை முப்பதாயிரத்திற்கு மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டுள்ளதோடு, அவற்றை பராமரித்தும் வருகிறார். இவர் நட்ட மரக்கன்றுகள் ஒரு இலட்சத்துக்கும் அதிகம் என்று சில குறிப்புகள் கூறுகின்றன. காடுகள் பராமரிப்புக்கும், தரிசு நிலங்கள் வளமடையவும் நற்பணியாற்றிவரும் தனிநபர்கள் அல்லது நிறுவனங்களுக்கு வழங்கப்படும், IPVM எனப்படும் Indira Priyadarshini Vrikshamitra விருதை 1986ம் ஆண்டில் இவர் பெற்றார். இது தவிர பல்வேறு விருதுகளையும் இவர் பெற்றுள்ளார். பத்மஸ்ரீ துளசி கவுடா அவர்கள், வனத்துறையில் வேலைக்குச் சேர்ந்த துவக்கத்தில் தேக்குத் தோட்டத்தில் ஆர்வம் கொண்டிருந்தார். பின்னர் இவர், அத்தி, பலா, நந்தி மற்றும், ஏனைய பெரிய மர வகைகளைப் பற்றி மேலும் அறிய தனது சொந்த முயற்சிகளை மேற்கொண்டார். தாவரங்களின் வாழ்க்கைச் சுழற்சி மற்றும் அவற்றின் பயன்பாடு பற்றிய இவரது ஏராளமான அறிவு, இவரைச் சந்தித்த பலரை ஆச்சரியமடையச் செய்து வருகிறது. மேலும், இவர் சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தி வருகிறார் என்று விக்கிப்பீடியா உள்ளிட்ட பல்வேறு செய்திகள் கூறுகின்றன.

காலநிலை மாற்ற உலகளாவிய ஒப்பந்தம்

COP26
COP26

இப்புவியின் சராசரி வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியசுக்குமேல் கூடினால், உலகில், பல கோடி மக்கள், கடும் வெப்பம், வெள்ளம் போன்ற இயற்கைப் பேரிடர்களால் துன்புறவேண்டியிருக்கும் என அறிவியலாளர்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். இந்தப் பேரிடர்களை, தமிழகம் உள்ளிட்ட பல்வேறு நாடுகள், எதிர்கொண்டு வருவதை நாம் அறிவோம். இந்நிலையில், கிளாஸ்கோவில் இரு வாரங்களாக நடைபெற்ற காலநிலை மாற்ற 26வது உலக உச்சி மாநாட்டிலும் முக்கிய தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. பசுமை இல்ல வாயுக்களை உமிழும் மோசமான புதைபடிவ எரிபொருளான நிலக்கரியின் பயன்பாட்டைக் குறைப்பதற்கு, இம்மாநாட்டில் ஒப்புதல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவே, காலநிலை மாற்றம் குறித்த முதல் உலகளாவிய ஒப்பந்தம் என்றும் சொல்லப்படுகிறது. அதேநேரம், இந்த ஒப்பந்தம் நிறைவேற்றப்படுவதற்கு, நாடுகளின் ஒருமித்த ஒப்புதலைப் பெறுவதில் இழுபறி ஏற்பட்டதால், நவம்பர் 12, இவ்வெள்ளியன்று நிறைவுபெறுவதாய் திட்டமிடப்பட்டிருந்த இந்த உலக மாநாடு, நவம்பர் 13, இச்சனிக்கிழமையன்று நிறைவுபெற்றது. இம்மாநாட்டில், ஏறத்தாழ 200 நாடுகளின் பிரதிநிதிகள் பங்குபெற்றனர்.

புவி மண்டலத்தை மாசுபடுத்தும் கார்பன்டை ஆக்சைடு வாயுவில், ஏறத்தாழ நாற்பது விழுக்காட்டிற்கு, நிலக்கரியே காரணம். எனவேதான், COP26 எனப்படும் இந்த உலக மாநாட்டில், நிலக்கரி பயன்பாட்டை படிப்படியாக ஒழிக்கவேண்டும் என்பதை உலக நாடுகள் ஒருமித்து ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பது வலியுறுத்தப்பட்டது. ஆனால், இதற்கு இந்தியா, சீனா போன்ற நாடுகள் எதிர்ப்புத் தெரிவித்ததையடுத்து, நிலக்கரி பயன்பாட்டை 'படிப்படியாக ஒழிப்பது' என்பதற்குப் பதிலாக, 'நிலக்கரி பயன்பாட்டை படிப்படியாகக் குறைப்பது' என, ஒருசில மாற்றங்களுடன், அந்த ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், அந்நிகழ்வின்போது உரையாற்றிய இந்த உலக மாநாட்டின் தலைவர் அலோக் சர்மா அவர்கள், வரலாற்று சிறப்புமிக்க இந்த ஒப்பந்தம், இப்புவியின் சராசரி காலநிலை 1.5 டிகிரி செல்சியுசுக்குமேல் அதிகரிக்காமல் இருப்பதற்கு முக்கிய பங்காற்றும் என்றும், நாடுகள் இதனை முழுமையாக நிறைவேற்றவேண்டும் என்றும் கண்ணீரோடு கேட்டுக்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அலோக் சர்மா அவர்கள், இந்த ஒப்பந்தம், ஒருசில மாற்றங்களோடு நிறைவேற்றப்படுவதற்குக் காரணமான இந்தியாவும் சீனாவும், காலநிலை மாற்றத்தால் கடுமையாய்ப் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்குப் பதில்சொல்லியே ஆகவேண்டும் என்று கோபத்தோடு கூறினார். மேலும், இவ்வுலக மாநாட்டின் நிறைவில் காணொளி வழியாகப் பேசிய, ஐ.நா. தலைமைப் பொதுச்செயலர் அந்தோனியோ கூட்டேரஸ் அவர்கள், இந்த ஒப்பந்தம் முக்கியமானது என்றாலும், காலநிலை மாற்றத்தை மட்டுப்படுத்துவதற்குப் போதுமானதாக இல்லை என்று கூறியுள்ளார்.

மூவேளை செப உரை 141121

கிளாஸ்கோவில் நடைபெற்ற ஐ.நா.வின் காலநிலை மாற்ற COP26 உச்சி மாநாடுபற்றி நவம்பர் 14, இஞ்ஞாயிறு மூவேளை செப உரையின் இறுதியில் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அரசியல் மற்றும் பொருளாதாரத் துறைகளுக்குப் பொறுப்பானவர்கள், துணிவு மற்றும், தொலைநோக்குப் பார்வையோடு காலநிலை மாற்றத்தைத் தடுக்கும் நடவடிக்கைகளில் உடனடியாகச் செயல்படுமாறு கேட்டுக்கொண்டார். இப்பூமியின் அழுகுரலோடு இணைந்து, வறியோரின் அழுகுரலும் இம்மாநாட்டில் ஒலித்தன என்றும் திருத்தந்தை கூறினார். அதோடு, ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவை துவக்கியுள்ள, ஒருங்கிணைந்த சூழலியலை ஊக்குவிக்கும், Laudato si’ களப்பணித் திட்டத்தில் பெயர்களைப் பதிவுசெய்யுமாறு, அனைவருக்கும் திருத்தந்தை அழைப்புவிடுத்தார். Laudato si' திருமடல் 2015 வெளியிடப்பட்டதன் ஐந்தாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, 2020ம் ஆண்டு மே 24ம் தேதி முதல், 2021ம் ஆண்டு மே 24ம் தேதி வரை Laudato si' ஆண்டு சிறப்பிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, அத்திருப்பீட அவை, 2021ம் ஆண்டு மே 25ம் தேதி, Laudato si' ஏழாண்டு களப்பணித் திட்டம் ஒன்றையும் துவக்கியது.

ஆறுகள் தங்களின் நீரை தாங்களே குடிப்பதில்லை, மரங்கள் தங்களின் கனிகளை தாங்களே உண்பதில்லை, சூரியன் தனக்கே ஒளிகொடுப்பதில்லை, மலர்கள், தங்களின் நறுமணங்களை தங்களுக்காகப் பரப்புவதில்லை. இவ்வாறு  மற்றவருக்காக வாழ்வது, இயற்கை விதித்த சட்டம். நாம் ஒருவர் ஒருவருக்கு உதவிசெய்வதற்காகப் பிறந்திருக்கிறோம். நாம் மகிழ்வாக இருக்கும்போது வாழ்க்கை நல்லதாகத் தெரிகிறது, நம்மால் மற்றவர் மகிழ்ச்சியாக இருக்கும்போது அவ்வாழ்க்கை இன்னும் சிறப்பாக இருக்கும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சொல்லியுள்ளார். ஐ.நா.வின் கூட்டேரஸ் அவர்கள் கூறியிருப்பது போன்று, காலநிலை மாற்றம் உருவாக்கியுள்ள பாதிப்புக்கள், இப்பூமிக்கோளத்திற்கு மரண அச்சுறுத்தலை முன்வைத்துள்ளன. இந்த அச்சுறுத்தலைத் தணிக்கும் முயற்சியில், பத்மஸ்ரீ துளசி கவுடா போன்ற சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், தங்களை ஈடுபடுத்தியுள்ளனர். இதனால் அவர்கள், தங்களைச் சுற்றியிருப்போர் நலமாகவும், மகிழ்வாகவும் வாழ உதவி வருகின்றனர். எனவே நாமும், நாளையத் தலைமுறை வளம்பெற, சுற்றுச்சூழலைப் பாதுகாக்க மரங்களை நடுவோம். சூழலியலைப் பேணிப் பாதுகாப்போம். சூழலியலுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் செயல்களைத் தவிர்த்து வாழ்வோம். பிறர் வாழவும் தூண்டுவோம், தூண்டுதலாகவும் இருப்போம். மறுசுழற்சிக்கு பயன்படாத பொருட்களை முற்றிலும் தவிர்த்திடுவோம். நாம் வாழும் இந்த பூமிக்கோளத்தைப் பாதுகாக்க நல்மாற்றத்தை உருவாக்குவோம்!

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 November 2021, 14:55